குமரி மாவட்டத்தில் மழைக்கு மேலும் 12 வீடுகள் இடிந்தன

நாகர்கோவில், அக்.25:  குமரி மாவட்டத்தில் மழைக்கு மேலும் 12 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்படுகிறது. தொடர் மழையால் அணைகள் நிரம்பி வருகின்றன. குறிப்பாக பெருஞ்சாணி அணை உச்சநீர்மட்டத்தை எட்டி வருகிறது. வெள்ள அபாய அளவான 72.05 அடியை எட்டியுள்ளது. அணைக்கு 572 கன அடி தண்ணீர் வரத்து காணப்படுகின்ற நிலையில் 861 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதனை போன்று சிற்றார் -1, சிற்றார்-2 அணைகளும் நிரம்பியுள்ளன. சிற்றார்-1ல் 16 அடியும், சிற்றார்-2ல் 16.11 அடியும் நீர்மட்டம் காணப்படுகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 33.65 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 579 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 54.12 அடியாகும். அணைக்கு 34 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் 34 கன அடி தண்ணீர் உபரியாக திறந்துவிடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் நேற்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

ஒரு சில இடங்களில் சாரல் மழையும் பெய்தது. இந்தநிலையில் அரபிக்கடல், வங்க கடல் பகுதிகளில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரபிக்கடலில் மணிக்கு 65 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்றும் (25ம் தேதி) வரை மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும், சில நேரங்களில் 65 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசும் எனவே மீனவர்கள் இந்த பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மழை நீடிப்பதால் குமரி மாவட்டத்தில் மண் சுவர்களினால் ஆன வீடுகள் தொடர்ந்து இடிய தொடங்கியுள்ளன. பல பகுதிகளிலும் வீடுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கி நிற்பதும், தண்ணீர் பாய்ந்தோடுவதும் இதற்கு காரணம் ஆகும். அந்த வகையில் நேற்று காலை வரை தோவாளை தாலுகாவில் 2, கல்குளத்தில் 6, விளவங்கோட்டில் 2, கிள்ளியூரில் 2 என்று மொத்தம் 12 வீடுகள் இடிந்து விழுந்து பகுதியளவு சேதமடைந்துள்ளன.

Related Stories:

>