×

விடுதி வார்டன் சஸ்பெண்ட் கண்டித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் தண்டராம்பட்டு அருகே பரபரப்பு

தண்டராம்பட்டு, ஜூன் 25: விடுதி வார்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து மாணவர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சந்தமேடு பகுதியில் அரசின் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதி உள்ளது. இங்கு 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் 25 மாணவர்கள் தங்கி அருகே உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்த விடுதியில் மேலும் 25 மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வு, தண்டராம்பட்டு தாலுகா அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், விடுதி வார்டன் அமாவாசையை நேற்று முன்தினம் இரவு சஸ்பெண்ட் செய்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் லாவண்யா உத்தரவிட்டார். இதுதொடர்பான உத்தரவு நகல் விடுதியில் உள்ள தகவல் பலகையில் ஒட்டப்பட்டது.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த மாணவர்கள், சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து வார்டன் அமாவாசையை மீண்டும் இதே விடுதிக்கு நியமிக்க வேண்டும் எனக்கூறி நேற்று காலை உணவு சாப்பிட மறுத்தனர். மேலும் வார்டனை மீண்டும் இங்கேயே நியமிக்காவிட்டால் விடுதியை விட்டு எங்களது வீடுகளுக்கே சென்றுவிடுகிறோம் எனக்கூறி தங்களது உடமைகளுடன் விடுதி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, தகவலறிந்த மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் லாவண்யா, கிராம நிர்வாக அலுவலர் சம்பத், வருவாய் ஆய்வாளர் ரமேஷ், இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் லாவண்யா கூறுகையில், ‘மாணவர்களாகிய நீங்கள் நல்லமுறையில் படிப்பதுதான் உங்கள் வேலை. இந்த விடுதிக்கு யார் காப்பாளர், சமையலர் வந்தாலும் உங்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கப்படும். மேலும், விடுதி காப்பாளர் அமாவாசை மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்துள்ளதால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் பள்ளிக்கு சென்று படியுங்கள் என்று கூறி மாணவர்களை அழைத்துக் கொண்டு பள்ளியில் சேர்த்தனர்.

பின்னர் லாவண்யா நிருபர்களிடம் கூறியதாவது, ‘விடுதி காப்பாளர் அமாவாசை மீது ஏற்கனவே முதலமைச்சர் தனிப் பிரிவிற்கு பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வந்துள்ளது. அதனை விசாரிப்பதற்காக 2 முறை மனு கொடுக்கப்பட்டது. ஆனால் விடுதி காப்பாளர் அமாவாசை விசாரணைக்கு வரவில்லை. இந்நிலையில், திருவண்ணாமலை கலெக்டர் விருப்ப நிதியிலிருந்து விடுதியை மேம்படுத்த ₹4 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அதற்கான கணக்கை சரியான முறையில் வழங்காததால் அவர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார். இதுகுறித்து, விடுதி காப்பாளர் அமாவாசையிடம் கேட்டபோது, ₹4 லட்சத்திற்கான கணக்கை கடந்த கல்வியாண்டில் இருந்த மாவட்ட கனிமவள அலுவலர் மைதிலியிடம் முறையாக நான் ஒப்படைத்து விட்டேன். ஆனால் தற்போது என்மீது வீண் பழி சுமத்துகின்றனர்’ என்றார்.

Tags : protest ,Dandarambattu ,hostel warden ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...