×

வேலூர் உட்பட 3 மாவட்டங்களில் 18 நகராட்சிகளில் குடிநீர் பிரச்னையை சமாளிக்க 422 பணிகளுக்கு ₹8.79 கோடி நிதி ஒதுக்கீடு

வேலூர், ஜூன் 21: வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 18 நகராட்சிகளில் குடிநீர் பிரச்னையை சமாளிக்க 422 பணிகளுக்கு ₹8.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் குடிநீர் பிரச்னை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் அன்றாட பணிகளை மேற்கொள்வதைவிட குடிநீருக்காக அலைய செலவிடும் நேரம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் குடிநீர் பிரச்னையால், தனியார் பள்ளிகள் அரை நாள் மட்டுமே செயல்படும் என அறிவித்துள்ளனர். மேலும், பெரிய ஐடி நிறுவனங்களும், தண்ணீர் பிரச்னையால் ஊழியர்களை வீடுகளிலேயே பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், வேலூர் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகத்தில், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள நகராட்சிகளில் குடிநீர் பிரச்னையை சமாளிப்பது தொடர்பான அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
 
இதைத்தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம், குடியாத்தம், ஆற்காடு, திருப்பத்தூர், ஆம்பூர், ராணிப்பேட்டை, வாணியம்பாடி, வாலாஜா, ேஜாலார்பேட்டை, மேல்விஷாரம், பேரணாம்பட்டு ஆகிய 11 நகராட்சிகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி, திருவத்திபுரம், வந்தவாசி ஆகிய 4 நகராட்சிகளும், விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய 3 நகராட்சிகளும் என மொத்தம் 18 நகராட்சிகளில் குடிநீர் பிரச்னையை சமாளிக்க 422 பணிகளுக்கு ₹8.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 18 நகராட்சிகளில் 66 புதிய போர்வெல்கள் அமைப்பது, நீர்மட்டம் குறைந்துள்ள 52 போர்வெல்களில் ஆழத்தை அதிகரிப்பது, 39 இடங்களில் மின்மோட்டார் பழுது சீரமைத்தல், வந்தவாசி நகராட்சியில் 3 திறந்தவெளி கிணறு, கள்ளக்குறிச்சி நகராட்சியில் 4 திறந்தவெளி கிணறு என மொத்தம் 7 திறந்தவெளி கிணறுகளை ஆழப்படுத்துதல், போர்வெல் அருகே மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட என மொத்தம் 422 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது’ என்றனர்.

Tags : districts ,municipalities ,Vellore ,
× RELATED ஒரே நாளில் ₹12.64 கோடிக்கு டாஸ்மாக்...