×

கூடுதல் பணியிடங்களை ஏற்படுத்த வலியுறுத்தல்

திருக்கோவிலூர், ஜூன் 18:  உணவு பாதுகாப்பு மற்றும் கலப்படம் ஆகியவற்றை கண்காணிக்க உணவு பாதுகாப்பு துறை கடந்த 2011ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த துறைக்கு உணவு பொருள் தொடர்பான தரத்தை பராமரிப்பது, உணவு நிறுவனங்
களின் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களாக மாற்றுவது, உணவு பொருட்கள் மாதிரிகள் சேகரிப்பது, கலப்படம் செய்பவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பது, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக தமிழகம் முழுவதும் பொது சுகாதார துறையின் கீழ் இயங்கும் சுகாதார துறை மற்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய இடங்களில் பணிபுரிந்த சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் என சுமார் 585க்கும் மேற்பட்டோர் பணியமர்த்தப்பட்டனர். வட்டார அளவில் ஒரு உணவு பாதுகாப்பு அலுவலர் என செயல்பட்டு வந்த இவர்கள் உணவு கலப்பட பொருட்கள் தடுப்பது, காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்வது, உணவு பொருட்களின் மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி குற்றச்சாட்டுகள் இருப்பது தெரியவந்தால் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்வது, தர உத்தரவாதம், உணவு நிறுவனங்களை பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களாக மாற்றுவது, உணவு பாதுகாப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் மொத்தமுள்ள 585 பணியிடங்களை சரி பாதியாக குறைத்து உத்தரவிடப்பட்டது.அவ்வாறு உத்தரவிட்ட நிலையில் பணி இட குறைப்பால் பாதிக்கப்பட்டவர்கள், பல்வேறு காரணங்களை கூறி ஏற்கனவே பணிபுரிந்த தாய் துறைக்கே அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் மீதமுள்ள சுமார் 300க்கும் மேற்பட்டோரை இரண்டு வட்டாரங்களுக்கு ஒரு உணவு பாதுகாப்பு அலுவலர் என நியமித்து கூடுதல் பணியை கவனிக்க சொல்லி நிர்பந்தப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் அவர்களில் மீண்டும் சிலர் பணிச்சுமை காரணமாகவும், மன உளைச்சல் காரணமாகவும் தாங்கள் ஏற்கனவே பணிபுரிந்த தாய் துறைக்கே விரும்பி இடமாறுதல் கேட்டு சென்றுவிட்டனர். இன்னும் சிலர் அதிகாரிகளின் நெருக்கடிக்காக விருப்ப இடமாறுதல் கேட்கவும் திட்டமிட்டுள்ளனர். இதனால் தடை செய்யப்பட்ட உணவு பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்கள் சந்தையில் விற்பனை புகுந்து விடுவதோடு, கலப்பட உணவு பொருட்கள், காலாவதியான உணவு பொருட்களை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த துறையில் கூடுதலாக பணியிடங்களை ஏற்படுத்தி மக்கள் நலன் காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : workplaces ,
× RELATED அனைத்து பாடத்துக்கும் பட்டதாரி...