×

நீரோடியில் வீடு இடிந்து விழுந்து ஒருவர் காயம் குமரியில் தொடர் கடல் சீற்றம்

நித்திரவிளை, ஜூன் 13: குமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கடல் சீற்றமாக உள்ளது. அலைகள் கடலரிப்பு தடுப்புச் சுவரில் வேகமாக மோதி செல்கிறது.  சில இடங்களில் தடுப்புச்சுவர் சேதமடைந்தும், தடுப்பு சுவர் இல்லாமலும் உள்ளது. கடல் சீற்றத்தின் போது இந்த பகுதி வழியாக கடல்நீர் ஊருக்குள் புகுந்து சேதங்களை விளைவித்து விடுகின்றன.      இந்நிலையில் கடந்த 10ம் தேதி நீரோடி காலனி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மீன் ஏலக்கூட கான்கிரிட் தரைதளம் இடிந்து சேதமடைந்தது. தற்போது அந்த பகுதி முழுமையாக சேதமடைந்து சாலை துண்டிக்கப்படும் நிலையில் உள்ளது. மேலும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அந்த பகுதியில தடுப்புச்சுவர் அமைக்க கேட்டு மீனவர்கள் அரசு அதிகாரிகளிடமும் சட்டமன்ற உறுப்பினரிடமும் முறையிட்டனர். ஆனால் இதுவரை மீனவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. நேற்றுமுன்தினம் இரவு கடல்சீற்றம் அதிகமாக இருப்பதை பார்த்த ஊர் மக்கள் மேலும் இதே நிலை நீடித்தால் சாலை துண்டிக்கபடும் என்பதால் சுமார் 1000 மணல் மூடைகளை அடுக்கி  கடல் அரிப்பு  தடுப்பு நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால் கடல்சீற்றமாக இருப்பதால் மீனவர்கள் பாதுகாப்பிற்காக அடுக்கிய மணல் மூட்டைகளை கடல்நீர் இழுத்து சென்று விட்டது.

நீரோடிகாலனி பகுதியியை சேர்ந்தவர் மீனவர் பெனடிக்ட்(55).  இவருக்கு சொந்தமான வீடு கடற்கரையை ஒட்டி உள்ளது. இந்த வீடு தற்போது ஏற்பட்டிருக்கும் கடல் சீற்றத்தில் இடிந்து விழும் நிலையில் இருந்துள்ளது. இதனால் பெனடிக்ட் குடும்பத்துடன் அருகில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி இருந்தார்.   நேற்று முன்தினம்  மாலை  பெனடிக்ட் தனது வீட்டில் வைத்திருந்த மீன்பிடி உபகரணங்களை எடுத்து வர முயன்ற போது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் பெனடிக்டின் தலையில் மேற்கூரை விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது.அலை சீற்றம் தொடர்ந்தால் பாதிப்புகள்  அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.  கடந்த மூன்று நாட்களுக்கு முன் மீன் கூடம்  உடைந்தபோது நீரோடி பகுதியில் போர்க்கால அடிப்படையில் கடலரிப்பு தடுப்புச்  சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இது வரை சுவர் அமைக்கும் பணி  ஆரம்பிக்காததால் இன்று (13ம் தேதி) போராட்டம் நடத்த போவதாக தெரிவித்தனர்.

Tags : house ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்