×

கிருஷ்ணகிரியில் பள்ளி சிறார்களுக்கு கலைப்பயிற்சி

கிருஷ்ணகிரி, ஜூன் 13:  கிருஷ்ணகிரியில் பள்ளி சிறார்களுக்கு அரசு சார்பில் பகுதி நேரக்கலைப் பயிற்சி தொடங்குகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கும் ஜவகர் சிறுவர் மன்றங்கள் மூலம் பள்ளி செல்லும், மாணவியர் கலைகளை பயிலும் வண்ணம் பகுதி நேர கலைப்பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரியில் பெங்களூர் சாலையில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகத்தில் ஜவகர் சிறுவர் மன்றம் இயங்கி வருகிறது. இம்மன்றத்தில் குரலிசை, பரத நாட்டியம், யோகா, ஓவியம் ஆகிய கலைகளில் சனிக்கிழமை மதியம் 2 மணி முதல் 4 மணி வரையிலும், ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும் கலைப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

5 வயது முதல் 16 வயது வரை உள்ள சிறுவர், சிறுமியர் இப்பயிற்சியில் சேரலாம். இப்பயிற்சிக்கு கட்டணம் இல்லை. சிறுவர் மன்ற உறுப்பினராக பதிவு செய்வதற்கு ஆண்டு சந்தா ₹300 செலுத்தப்பட வேண்டும். வருகிற 22ம் தேதி பகல் 2 மணிக்கு பகுதி நேர பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது. இந்த பயிற்சி 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இறுதி வரை நடைபெறும். இம்மன்றத்தில் உறுப்பினராகி பயிற்சி பெறும் சிறார்கள் மாவட்டம், மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கவும், கருத்தரங்கம், செயல்முறை பயிலரங்கம் ஆகியவைகளில் கலந்துகொள்ள வாய்ப்பளிக்கப்படும். பயிற்சியில் சேர்வதற்கான பதிவு தொடங்கியுள்ளது. மேலும் விவரங்கள் வேண்டுவோர் கிருஷ்ணகிரி ஜவகர் சிறுவர் மன்றத்தின் திட்ட அலுவலரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Tags : School children ,Krishnagiri ,
× RELATED கனடாவில் பள்ளி குழந்தைகளுக்கு உணவுத் திட்டம் அறிமுகம்