×

கிருஷ்ணகிரி அணையில் தண்ணீர் திறப்பது குறித்து இன்று ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி, ஜூன் 12: கிருஷ்ணகிரி அணையில் இன்று (12ம் தேதி) நீர்ப்பாசன சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், முதல்போக சாகுபடிக்கான நாற்று நடவுகள் பணிகள் இம்மாத இறுதியில் துவங்க உள்ளது. எனவே, கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அணையின் நீர்மட்டம் 40 அடியை தாண்டினால் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை நிலவரப்படி அணையின் மொத்த உயரமான 52 அடியில் 40.20 அடி உயரம் தண்ணீர் உள்ளது. அணைக்கு வந்து கொண்டிருக்கும் 257 கன அடி தண்ணீரை பாரூர் ஏரியில் நிரப்ப அப்படியே ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இந்நிலையில் முதல்போக சாகுபடி செய்வது குறித்தும், அணையின் 7 பிரதான மதகுகள் மாற்றுவது குறித்தும், அணை நீர்ப்பாசன சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் இன்று (12ம் தேதி) காலை 9.30 மணிக்கு கிருஷ்ணகிரி அணை உட்கோட்ட அலுவலகத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் விவசாயிகள் அனைவரும் பங்கேற்று, தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என உதவி செயற்பொறியாளர் சரவணகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : meeting ,water opening ,dam ,Krishnagiri ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...