×

மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு

போச்சம்பள்ளி, ஜூன் 11:  மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். போச்சம்பள்ளியில் இருந்து தர்மபுரி செல்லும் பிரதான சாலையில் பிரசித்த பெற்ற மஞ்சமேடு சிவன் கோயில் உள்ளது. இக்கோயிலையொட்டி, தென்பெண்ணை ஆறு ஓடுகிறது. தினசரி பல்வேறு பகுதிகளிலிருந்து மஞ்சமேடுக்கு வரும் பக்தகர்கள் தென்பெண்ணை ஆற்றில் புனித நீராடி விட்டு சிவன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

சபரிமலை சீசனில் அய்யப்ப பக்தர்களும், மேல் மருவத்தூர் சீசன்களில் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும், ஆடி 18 அன்று சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் லாரி, வேன்களில் குடும்பத்துடன் வந்து புனித நீராடி விட்டுச் செல்கின்றனர். இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் தங்கள் கடைகளில் சேரும் குப்பை கழிவுகளை கொண்டு வந்து ஆற்றங்கரையோரம் கொட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். நாள் கணக்கில் தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகளால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், சுகாதார சீர்கேடு அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மஞ்சமேட்டில் ஓடும் தென்பெண்ணையாறு பக்தர்களால் பொன்னியாறு என அழைக்கப்படுகிறது. பல்வேறு இடங்களிலிருந்து வரும் மக்கள் ஆற்றில் புனித நீராடி விட்டு அருகில் உள்ள சிவன் கோயிலில் வழிபட்டு செல்கின்றனர். ஆனால், கடந்த சில நாட்களாக மீன் கழிவுகள், கோழி கழிவுகளை குவித்து வருகின்றனர். இதனால், சுகாதார சீர்கேடு அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பை கழிவுகள் கொட்டுப்படுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்றனர்.

Tags : river ,
× RELATED கூழாங்கல் ஆற்றில் குளிக்கத் தடை