கிருஷ்ணகிரி, ஜன.12: சமூக நீதி மாணவ, மாணவியர் விடுதியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கலைப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் கேடயத்தை கலெக்டர் வழங்கினார். செப்டம்பர் 17ம்தேதி சமூகநீதி நாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரி அடுத்த போகனப்பள்ளி சமூக நீதி மாணவர் விடுதி-1, போகனப்பள்ளி சமூக நீதி மாணவர் விடுதி-2, அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவியர் விடுதி-2, ராஜாஜி நகர் சமூக நீதி மாணவியர் விடுதி-1 ஆகிய விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள், ரங்கோலி, பாட்டுபோட்டி, ஒவியம் வரைதல், கதை எழுதுதல், கவிதை எழுதுதல், போன்ற கலை போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியில் முதலிடம் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் தினேஷ்குமார் வழங்கினார்.
அதேபோல விளையாட்டு போட்டியில் முதலிடம் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தங்க பதக்கம், வெள்ளி பதக்கம் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘ஆதிதிராவிடர் மற்றும் நலத்துறை சார்பில், சமூக நீதி நாளை முன்னிட்டு சமூகநீதி கல்லூரி விடுதி மாணவ மாணவிகளுக்கு நல்லோசை-களமாடு என்ற தலைப்பில் கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. விளையாட்டு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. உங்களின் இலக்குகளில் தடைகள் வந்தாலும், அவற்றை தாண்டி வெற்றி பெற உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்,’ என்றார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் சிவகுமார், விடுதி காப்பாளர்கள் முருகேசன், அசோக்ராஜ், அனுஷியா, தமயந்தி, ஒருங்கிணைப்பாளர்கள் இளையகுமாரி, விக்னேஷ்குமார் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
