×

மேற்குத்தொடர்ச்சி மலையில் எஸ்டேட் தொழிலாளி மர்மச்சாவு

சிவகிரி, ஜூன் 11:  சிவகிரி அடுத்த தேவிப்பட்டினம் மேற்குயுள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில், கல்யாணப்பாறைக்கு கிழக்கே கள்ளிமலை எஸ்டேட் செல்லும் வழியில் ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கும், வனத்துறைக்கும் தகவல் கிடைத்தது. சிவகிரி ஏட்டுகள் முனியசாமி, முத்துராஜ், வனச்சரக அலுவலர் ஸ்டாலின், வனவர் முருகன், வனக்காப்பாளர்கள் திருவேட்டை, லட்சுமணப்பெருமாள், வனக்காவலர்கள் மணிகண்டன், கருணாகரன், பாக்கியசாமி, வேட்டைத்தடுப்பு காவலர்கள் மாரியப்பன், ஆனந்தன், பாலு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்றனர்.

அங்கு முகம் சிதைந்த நிலையில் ஆண் சடலம் கிடந்தது. அருகில் ரூ.500, காலி மதுபாட்டிலும் காணப்பட்டது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நேற்று முன்தினம் இரவு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் இறந்து கிடந்தவர், சிவகிரி சந்தைப்பேட்டை தெருவை சேர்ந்த முனியசாமி மகன் மாரியப்பன் (38) என்பதும், கள்ளிமலையில் உள்ள தனியார் எஸ்டேட்டிற்கு வேலைக்காக கடந்த 6ம் தேதி காலை வீட்டை விட்டு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை என்றும் தெரிய வந்தது.

இதுகுறித்து எஸ்ஐ துரைசிங்கம் வழக்குப் பதிந்து குடிபோதையில் மாரியப்பன் தடுமாறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகிறார். இதனிடையே நேற்று காலை சிவகிரி அரசு மருத்துவமனையில் திரண்ட மாரியப்பன் உறவினர்கள், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து மாரியப்பன் உடல், பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  இறந்த மாரியப்பனுக்கு காளீஸ்வரி (35) என்ற மனைவியும், மணிமேகலை(16), துர்கா(12), முனீஸ்வரி(10) என 3 மகள்களும் உள்ளனர்.

Tags : estate worker ,Western Ghats ,
× RELATED ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி...