×

மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் விவசாயத்தை பாதுகாக்க சோலார் மின்வேலி அவசியம்

*காட்டுப்பன்றிகள், யானைகளால் அவதிப்படும் விவசாயிகள் கோரிக்கை

தேவாரம் : தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவார நிலப்பகுதிகளில். வன உயிரினங்களிடம் இருந்து விவசாயத்தை பாதுகாத்திட சோலார் மின்வேலி அமைக்கப்பட வேண்டும் என்று, விவசாயிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.தேனி மாவட்டத்தின் மேற்குதொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில், குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே யானைகள், காட்டுப்பன்றிகள் அதிக அளவில் வாழ்கின்றன. இவற்றின் வாழும் தகவமைப்புள்ள அடர்ந்த காடுகள் தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம், பகுதிகளில் உள்ளன. காரணம் இப்பகுதிகளில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிகளில் காட்டு யானைகள் வாழ்வதற்குரிய, நடந்து செல்லும் பாதைகள், முக்கிய உணவான மூங்கில் மரங்கள், நீறுற்றுகள் அமைந்துள்ளது.

இதனால் தேவாரம் மலையடிவாரத்தில், வழக்கமாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கிறது. தற்போதைய கணக்கின்படி இப்பகுதியில் 5 யானைகள் வரை உள்ளன.
அதே நேரத்தில் காட்டு பன்றிகள் கூட்டம், கூட்டமாக வாழ்கின்றன. இவை அவ்வப்போது மலையடிவாரத்தில் இருந்து இறங்கி வந்து விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடுகின்றன. மலைப்பகுதிகளில் போதிய தீவனங்கள் கிடைக்காததால் இந்த நடவடிக்கை தொடர்கிறது. இதன்படி விவசாய பயிர்களான மரவள்ளி கிழங்கு, அவரை, தென்னை, வாழை, தக்காளி, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களை துவம்சம் செய்து விட்டு, மீண்டும் அடர்ந்த காட்டுப் பகுதிகளுக்குள் செல்வது வழக்கமாக உள்ளது.

தேவாரம், சாக்கலூத்து, ராமக்கல் மெட்டு, சதுரங்கப்பாறை உள்ளிட்ட பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் இவற்றின் நடமாட்டம் குறைவாக இருந்தாலும், விவசாயம் அதிகம் செய்யக்கூடிய மலையடிவாரத்தை அடுத்துள்ள விவசாய நிலங்களில் அவ்வப்போது வந்து விவசாயிகளை அச்சுறுத்துவதும் வழக்கமாக இருக்கிறது. இவற்றிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் இரவு பகலாக ஒன்றுகூடி காவல் இருக்க வேண்டியது கட்டமாக இருக்கிறது. எனவே விவசாய பயிர்களை யானைகள் மற்றும் காட்டுப்பன்றிகளிடம் இருந்து பாதுகாக்க, இப்பகுதிகளில் உடனடியாக சோலார் மின்வேலி அமைக்க வேண்டும் என்பது தேவாரம் பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

விவசாய பயிர்கள் யானைகளாலும், காட்டு பன்றிகளாலும் நாசப்படுத்தப்படும்போது, தேவாரம் விவசாயிகள் இதன் நடமாட்டத்தை கட்டுப்படுத்திடவும், இழப்பீடு கேட்டும் கலெக்டர், மற்றும் உத்தமபாளையம் வனத்துறையினரை நேரடியாக தொடர்பு கொள்வது வழக்கமாக உள்ளது. இந்த பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் கடந்த 2001ம் ஆண்டு முதல் அதிக அளவில் இருந்து வருகிறது. காரணம் காடுகளை அடுத்துள்ள பகுதிகள் பெருமளவில் விளை நிலங்களாக மாறிவிட்டன.

மேலும், மலையடிவாரத்தை அடுத்துள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் மரங்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. மேலும், யானைகளின் தீவனமான மரங்களின் எண்ணிக்கையும் குறைந்திருப்பதும், அடர்ந்த காடுகளில் இருந்து மக்கள் வாழும் நிலங்களுக்கு யானைகள் வருவதற்கான அடிப்படை காரணமாக இருக்கிறது.

யானைகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதால், தங்கள் விளைநிலங்களுக்குள் செல்வதற்கே விவசாயிகள் அச்சப்படும் நிலை தொடர்கிறது. யானைகளின் இடப்பெயர்ச்சியால் விளைபொருட்கள் சேதமடையாமல் இருக்க, குறைந்தபட்ச பாதுகாப்பாக சோலார் மின்வேலி அமைக்கப்பட வேண்டும் என்பது விவசாயிகளின் தொடர் கோரிக்கையாக உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம் மலையடி வாரத்தை சுற்றிலும் யானைகள் அதிகம் வந்து செல்லும் பாதையாக 13 கி.மீ கணக்கிடப்பட்டது. பின்னர் யானைகளுக்கும், விவசாய பயிர்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக சிறு அதிர்வுகளை ஏற்படுத்தும் குறைந்த அழுத்த சோலார் மின்வேலி அமைக்க திட்டமிடப்பட்டது.

இந்த மின்வேலியால் யானைகளுக்கு உயிரிழப்பு ஏற்படாது. குறைவழுத்த சோலார் மின்வேலியின் அதிர்வுகளால் அஞ்சும் யானைகள் மீண்டும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று விடும். இப்படி உருவான திட்டம் இறுதியில் கிடப்பில் போடப்பட்டது.பின்னர் 2019ம் ஆண்டு 2.5 கி.மீ தூரம் மட்டும் சோலார் மின்வேலி அமைக்கப்பட்டது. யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பிள்ளையார் ஊற்று பகுதிகளில் சோலார் மின்வேலி அமைக்கப்பட்ட நிலையில், தற்போது அதுவும் செயலிழந்து காணப்படுகிறது.

இதனால் ஒவ்வொரு வருடமும் காட்டு யானைகள் மற்றும் பன்றிகளால் விவசாயிகள் விளைபயிர் சேதமும், அதனால் அவர்களுக்கு பெரும் இழப்பும் தொடர்கதையாகி வருகிறது. இதற்கு தீர்வு காண, மேற்குத்தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் சோலார் மின்வேலி அமைப்பது மட்டுமே நிரந்தர தீர்வாக இருக்கும் என்பது விவசாயிகள் கருத்தாகவும், கோரிக்கையாகவும் உள்ளது.

பயன்பாடு இல்லாத அகழி…

காட்டு யானைகள் மற்றும் காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் விளைபயிர்களை அதிக அளவில் சேதப்படுத்துகிறது என்பதற்காக, 2001 – 2002ம் வருடம் மலையடிவாரத்தில் அகழி வெட்டப்பட்டது. பின்பு பல்வேறு காரணங்களால் அது பயன்பாட்டிற்கு வராமல் மூடப்பட்டது. எனவே, இனிவரும் காலங்களில் சோலார் மின்வேலி, மற்றும் அகழி உள்ளிட்டவற்றை உருவாக்கும்போது, விவசாயிகள் பயன்படும் வகையில் திட்டங்களை உருவாக்கி, அவற்றுக்கு போதிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

யானைகள் பாதுகாப்பு அவசியமானது…

தேவாரம் வனப்பகுதியில் கடந்த 20 வருடங்களில் 2 யானைகள் இறந்துள்ளன. யானைகளால் பல்வேறு நன்மைகள் விவசாயிகளுக்கு கிடைக்கிறது. காடுகளை பாதுகாப்பதில் யானைகள் மிகப்பெரிய கேடயமாக உள்ளது. எனவே யானைகள் பாதுகாப்பிலும், அவற்றின் இனப்பெருக்கத்திற்கும் உடனடியாக இப்பகுதியில் உள்ள வனப்பகுதியை முறையாக பாதுகாக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை வனத்துறை மேற்கொள்ள வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது.

The post மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் விவசாயத்தை பாதுகாக்க சோலார் மின்வேலி அவசியம் appeared first on Dinakaran.

Tags : Western Ghats ,Theni ,Dinakaran ,
× RELATED விளைச்சல் குறைந்ததால் மாங்காய் விலை உயர்வு