×

வாகனங்களின் அதிகப்படியான புகையால் பாதிப்பு அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க கோரிக்கை

வேலூர், ஜூன் 7: வாகனங்களுக்கான புகை தரச்சான்று புதுப்பிப்பதில் நடக்கும் விதிமீறல்களை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த வாகனங்களில் இருந்து அதிகப்படியான புகை வெளியேறுவதால் காற்று மாசடைந்து வருகிறது. குப்பைகள் உள்ளிட்டவை எரிக்கப்படும் நிலையில், காற்று மாசடைவதற்கு 70 சதவீதம் வரை வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையே காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற காற்று மாசுபாட்டால் மூச்சுத்திணறல் உட்பட சுவாச பிரச்னைகள், இதயக் கோளாறு போன்ற பாதிப்புகள் மனிதர்களுக்கு ஏற்படுகிறது.

சமீபத்தில் சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் காற்று மாசுபாட்டால் உயிரிழப்பதாகவும், இவர்களில் 1 லட்சம் பேர் குழந்தைகள் என்றும் அதிர்ச்சி தகவலை வெளியாகியுள்ளது. இதனால், காற்று மாசுவை கட்டுப்படுத்த வேண்டியது கட்டாயம்.எனவே, வாகனங்களில் இருந்து குறிப்பிட்ட அளவுக்கு மேல் புகை வெளியேறினால் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக, தனியார் புகை பரிசோதனை நிலையங்கள் போக்குவரத்துத்துறை சார்பில் இயங்கி வருகிறது. தமிழகத்தில் 350க்கும் மேற்பட்ட புகை பரிசோதனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், புகை பரிசோதனை நிலையங்களில் விதிமீறல்கள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், வாகனங்களில் இருந்து அதிகப்படியான புகை வெளியேறி சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது. எனவே, புகை தரச்சான்று நிலையங்களை சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், ‘வாகனங்களில் இருந்து அதிகப்படியான புகை வெளியேறுகிறதா? என்பதை கண்டறிந்து தனியார் நிலையங்களில் புகை தரச்சான்று பெற வேண்டியது கட்டாயம். இதற்காக, வாகனங்களின் சைலன்சரில் பைப் லைன் இணைத்து புகையின் அளவு கணினியில் கண்காணிக்கப்படும். ஆனால் புகை தரச்சான்று வழங்கும் தனியார் நிலையங்களில் வாகனங்களை பரிசோதிப்பதே கிடையாது. வாகனங்களின் உரிமையாளர்கள் 6 மாதங்களுக்கு ஒருமுறை குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி புகை தரச்சான்று புதுப்பித்து கொள்கின்றனர். இதுதவிர பெரும்பாலானோர் புகை தரச்சான்று புதுப்பிப்பதே கிடையாது. இதனால், காற்று அதிகளவில் மாசடைந்து வருகிறது. எனவே, தனியார் புகை தரச்சான்று நிலையங்களில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.


ஏர் ஹாரன்களால் விபத்து

குறிப்பிட்ட டெசிபல் அளவுக்கு மேல் ஒலி எழுப்பக்கூடிய ஹாரன்களை வாகனங்களில் பயன்படுத்தக்கூடாது. ஆனால், பெரும்பாலான வாகனங்களில் ஏர்ஹாரன்களை பயன்படுத்தி வருகின்றனர். திடீரென அதிகமான ஒலி எழுப்பும் வாகனங்களால் சாலையோரம் நடந்து செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அலறுகின்றனர். இதுதவிர நாய் குரைப்பது உள்ளிட்ட விலங்குகளின் சத்தம் எழுப்பும் மியூசிக்கல் ஹாரன்களையும் சிலர் பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற ஹாரன்களால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, ஏர் ஹாரன்களை பயன்படுத்துபவர்களுக்கு அதிகப்படியான அபராதம் விதிப்பதோடு, ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Most ,smoke victims ,
× RELATED கோடையில் சில் பண்ணனுமா? இங்கே போங்க…....