×

கோடையில் சில் பண்ணனுமா? இங்கே போங்க…. மலைகளின் இளவரசிக்கும்… மலைகளின் ராணிக்கும்… மக்கள் படையெடுப்பு

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வெயில் சதத்தை கடந்து கொளுத்துகிறது. வெயிலுக்கு இதமாக சென்று வரக்கூடிய இடங்களில் முக்கிய இடத்தில் கொடைக்கானல் இருக்கிறது. ஏப்ரல், மே இரு மாதங்களிலும் கடும் குளிர் இன்றி, அதிக வெப்பமும் இன்றி குளுகுளு சீசன் நிலவுகிறது. மலைப்பகுதி முழுக்க ஏசி போட்டது போன்ற சூழலை ரசிப்பதற்கெனவே மாநிலம் முழுவதிலும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏன், பல்வேறு நாடுகளில் இருந்தும் கூட மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

கொடைக்கானலில் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், குணா குகைகள், தூண் பாறை மட்டுமின்றி பேரிஜம் வனப்பகுதி, மன்னவனூர் சூழல் பூங்காவும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவற்றில் பேரிஜம் வனப் பகுதிக்கு சென்று வர சிறப்பு அனுமதி வேண்டும். இந்த சுற்றுலா தலங்கள் தவிர பசுமை பள்ளத்தாக்கு, அப்பர் லேக் வியூ, 3 பூங்காக்கள், கொடைக்கானல் ஏரி உள்ளிட்ட சுற்றுலா இடங்களும் உள்ளன. மஞ்சுமல் பாய்ஸ் மலையாள சினிமா வெளியானதற்கு பிறகு பிரதான பகுதியாக குணா குகை கூடுதல் சுற்றுலா அந்தஸ்து பெற்றுள்ளது. நகர் பகுதி தவிர மேல் மலையின் மன்னவனூர் பகுதியில் சூழல் பூங்கா, ஏரி கூட்டத்தால் நிறைகிறது.

இங்கு பரிசல் படகு சவாரி, ஜீப் ரோப் சாகச விளையாட்டு இருக்கிறது. குளிர்மிகு கூக்கால் பகுதியில் இளம் சுற்றுலா பயணிகள் அதிகம் காணலாம். கொடைக்கானல் ஏரி அருகே தனியார் சார்பில் 7டி அரங்கம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள், கொடைக்கானல் பிரயண்ட், ரோஜா பூங்காக்களில் சிறுவர்களுக்கான பொழுது போக்குகள் இருக்கிறது. ரூ.150க்கு 10க்கும் அதிக சுற்றுலா இடங்களை சென்று காண அரசு போக்குவரத்து கழகம் தனி பஸ் போக்குவரத்து இயக்குகிறது. சொந்த வாகனங்கள் தவிர, வாடகை வாகன வசதிகளும் உள்ளன.

கோடை சீசன் காலமான ஏப்ரல், மே இரு மாதங்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை லட்சக்கணக்கில் இருக்கிறது. நாள்தோறும் பல ஆயிரம் வாகனங்களால் சாலைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் வாகன நெரிசலால் குறைந்தது 2, 3 நேரம் தொடர்ந்து போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைக்கிறது. வாகனங்களுக்கென பார்க்கிங் வசதிகளை அதிகப்படுத்துவதுடன், முக்கிய இடங்களில் சாலைகளை அகலப்படுத்துவது பலன் தரும். கொடைக்கானல் கலையரங்கம் பகுதியில் பல அடுக்கு கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்தலாம். கொடைக்கானல் பஸ் நிலையம் அருகாமை அரசு போக்குவரத்து கழகத்தின் 50 ஏக்கர் நிலத்தை சீசன் காலங்களிலாவது தற்காலிக பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம்.

வார இறுதி நாட்களில் கொடைக்கானல் நோக்கி வரும் வாகனங்களை காட் ரோடு, ஊத்து, பெருமாள் மலை உள்ளிட்ட பகுதிகளில் சிறிதுநேரம் போலீசாரின் மேற்பார்வையில் நிறுத்தம் செய்து பிறகு மேல்நோக்கி அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைளால் மட்டுமே இந்த நெரிசலை சமாளிக்கலாம். கொடைக்கானல் நகரப்பகுதியை அடுத்துள்ள மன்னவனூர், பூம்பாறை, கூக்கால் போன்ற மலைகிராம பகுதிகளில் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும். ஸ்கைவாக், ட்ரீ வாக், சூழல் சுற்றுலா, வனச் சுற்றுலா, மூலிகை சுற்றுலா என்று சுற்றுலாத்துறையும் , வனத்துறையும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக திட்டங்களை வகுத்து நடவடிக்கை மேற்கொள்வதும் நகர் பகுதிகளில் நிலவும் நெருக்கடியை குறைக்கும். வெளியூர்களில் இருந்து கொடைக்கானல் சென்று வருவதற்கு கூடுதல் சாலைகளை திட்டமிட வேண்டும்.

ஏற்கனவே பல ஆண்டுகளாக இழுத்தடித்து நடந்துகொண்டிருக்கின்ற கொடைக்கானல் – அடுக்கம் கும்பக்கரை சாலையை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். கொடைக்கானல் பேத்துப்பாறை வழியாக பழநிக்கு புதிய சாலை அமைக்கும் திட்டத்தை வேகப்படுத்த வேண்டும். இதுதவிர, கொடைக்கானல் பழநிக்கு ரோப்கார் திட்டத்தை உயர் தொழில்நுட்பத்தில் அமைத்தால் சுற்றுலா மேம்படும், போக்குவரத்தும் சீர்படும். கொடைக்கானல் – மூணாறு சாலை அமைந்தால் கொடைக்கானலில் நிலவி வரும் நெருக்கடி சரியாகும். ஏற்கனவே எஸ்கேப் ரோடு எனும் சாலை வனத்துறையால் மூடப்பட்டுவிட்டது. கொடைக்கானல் பேரிஜம் வழியாக மூணாறு செல்லும் மலை சாலையும், வனத்துறையால் மூடப்பட்டுவிட்டது.

* மலைகளின் ராணியான ஊட்டி, சிறந்த மலைவாச ஸ்தலமாக விளங்கி வருகிறது. ஊட்டி சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது. இங்கு நிலவும் குளு குளு சீேதாஷன நிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக கோடை சீசன் சமயமான ஏப்ரல், ேம மாதங்களில் சுற்றுலா பயணிகள் வருகை பன்மடங்கு அதிகரிக்கும். இந்நிலையில் இந்த ஆண்டு பள்ளிகளில் தோ்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இது தவிர சமவெளி பகுதிகளில் வெயில் கொளுத்துவதால் குளு குளு ஊட்டியை நோக்கி சுற்றுலா பயணிகள் படையெடுக்கின்றனர்.

தமிழகத்தின் தொலைதூர மாவட்டங்களில் இருந்து ஊட்டிக்கு வர வேண்டும் என்றால் ஒரு நாள் முழுவதும் பயணத்திலேயே செலவழிக்க வேண்டும். இதனால் தொலைதூர மாவட்டங்களில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் இங்கு வருவதில்லை. மூன்று மாநில எல்லையில் நீலகிரி அமைந்துள்ளதால் கேரளா, கர்நாடகாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்து செல்கின்றனர். தமிழகத்தில் கடந்த 19ம் தேதி வெள்ளிகிழமையன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதனால் அன்றைய தினம் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

தொடர்ந்து சனிக்கிழமை விடுமுறை தினம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் மகாவீர் ஜெயந்தி விடுமுறை நாளான நேற்று ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் மற்றும் தொட்டபெட்டா மலைச்சிகரம் போன்ற சுற்றுலா தளங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர். அதற்கேற்ப ஊட்டியில் வெயிலான காலநிலை நிலவிய நிலையில் அதனை அனுபவித்தபடியே சுற்றிப்பார்த்தனர். சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்துள்ள நிலையில் லாட்ஜ்கள், ஓட்டல்கள், காட்டேஜ்களில் பெரும்பாலான அறைகள் நிரம்பின.

கடந்த இருநாட்களிலும் ஏறக்குறைய சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவை சுற்றி பார்த்து சென்றனர். ஊட்டி நகரில் உள்ள சுற்றுலா ரங்களை பார்த்து மகிழ்வது மட்டுமின்றி நகருக்கு வெளியில் அமைந்துள்ள தேயிலை பூங்கா, சூட்டிங்மட்டம், பைக்காரா நீர்வீழ்ச்சி, ஊசிமலை, குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோடநாடு காட்சி முனை போன்ற இடங்களுக்கும் சென்று பார்வையிட்டு மகிழ்ந்தனர். பைக்காரா படகு இல்ல சாலை சீரமைப்பு பணிக்காக மூடப்பட்டுள்ளதால் அங்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக தாவரவியல் பூங்கா சாலை, படகு இல்ல சாலைகளில் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டது. இவற்றை காவல்துறையினர் உடனுக்குடன் சரி செய்தனர்.

மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப்படும் நூற்றாண்டு பழைமை வாய்ந்த மலை ரயிலில் பயணிக்க பிற மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் மற்றும் செப்டம்பர் அக்டோர் மாதங்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவு ஊட்டிக்கு வருவது வழக்கம். அவ்வாறு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் முன்கூட்டியே முன்பதிவு செய்து ஊட்டி மலை ரயிலில் பயணித்து இயற்கை காட்சிகளை பார்வையிட்டு மகிழ்வார்கள். சீசனின்போது தென்னக ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் சிறப்பு ரயில் இயக்கப்படுவது வாடிக்கை.

வழக்கமாக ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படும். இம்முறை கோடை சீசனுக்கான சிறப்பு மலை ரயில் சேவை முன்னதாக கடந்த மாதம் இறுதியிலேயே துவங்கியது. ஊட்டி – மேட்டுப்பாளையம், ஊட்டி – குன்னூர் மற்றும் ஊட்டி – கேத்தி – ஊட்டி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஜூலை 1ம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை ஆகிய நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இதில் முன்பதிவு செய்து பயணிக்க சுற்றுலா பயணிகள் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மகாவீர் ஜெயந்தி தினமான நேற்று மலைரயிலில் கூட்டம் காணப்பட்டது. இந்த சிறப்பு ரயில்களில் ஜூலை 1ம் தேதி வரை அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

* மூணாறிலும் சீசன் ஜோர்
கேரள மாநிலம் மூணாறில் கோடை விடுமுறை சீசன் ஆரம்பித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. கேரளா உட்பட பிற மாநிலங்களில் சித்திரை வெயில் வாட்டி வதைக்கும் போதும் மூணாறில் குளிர்ந்த காலநிலையே நிலவுகிறது. மூணாறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்வதால் மாலை நேரங்களில் குளிர்ந்த காற்று வீசுகிறது. இதனால் கோடை சீசனை அனுபவிக்க மூணாறுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. தற்போது கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் உள்ள சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்.

மூணாறுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள அணைக்கட்டுகளில் படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மூணாறு அருகே உள்ள மாட்டுப்பெட்டி, குண்டளை மற்றும் செங்குளம் போன்ற அணைக்கட்டு பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. சுற்றுலா பயணிகள் அணைக்கட்டை சுற்றி பார்ப்பதுடன், இங்கு படகு சவாரிக்கும் வாய்ப்பிருப்பது சுற்றுலா பயணிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
படகு சவாரியின் போது, சுற்றிய இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், யூக்காலி மரங்கள் மட்டுமல்லாது காட்டுயானை, காட்டு எருமைகளையும் கூட்டம் கூட்டமாக காண முடிகிறது.

இதுதவிர, பெரியவாரை ஷூட்டிங் பாயிண்ட், இரண்டாம் மைல் வியூ பாயிண்ட் போன்ற பகுதிகளிலும் கூட்டம் அதிகமுள்ளது. போட்டோ எடுத்துக்கொள்ளவும், குதிரை சவாரி செய்யவும் ஆர்வம் காட்டுகின்றனர். இத்துடன், பழைய மூணாறில் ஹெட் ஒர்க்ஸ் அணைக்கட்டு அருகாமை தாவரவியல் பூங்காவில் மாலை நேரத்தில் குளிர்ந்த காலநிலை, இங்குள்ள பலவிதமான ஒளிரும் விளக்குகள், வண்ண பூக்கள், செல்பி பாயிண்ட் போன்றவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. தமிழக பயணிகள் தேனி – போடி வழியாக பூப்பாறை – மூணாறு சாலையில் பயணம் செய்யத்தான் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிகளவில் வெளிமாநில பயணிகள் வருகை இருப்பதால், மூணாறுக்குள் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது.

The post கோடையில் சில் பண்ணனுமா? இங்கே போங்க…. மலைகளின் இளவரசிக்கும்… மலைகளின் ராணிக்கும்… மக்கள் படையெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kodaikanal ,Dinakaran ,
× RELATED ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்...