×

தளி அருகே கர்நாடக வாலிபரை கொன்று வீசிச்சென்ற மர்மகும்பல்

தேன்கனிக்கோட்டை, மே 15: கர்நாடக வாலிபரை அடித்துக்கொன்ற மர்மநபர்கள், அவரது உடலை தளி அருகே தனியார் நிலத்தில் வீசிச் சென்றுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தளி-தேன்கனிக்கோட்டை சாலையில், சிலிபிலிமங்கலம் கிராமத்தில், நேற்று முன்தினம் தனியார் நிலத்தில் வாலிபர் ஒருவர் காயங்களுடன் இறந்து கிடப்பதாக, தளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
 
இதன்பேரில், தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி சங்கீதா, தளி இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் இறந்து கிடந்தவருக்கு சுமார் 30 வயது இருக்கும். பச்சை கோடு போட்ட சட்டை, புளூ கலர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார். கழுத்து, கால் பகுதியில் ரத்த காயம் உள்ளது. இடது கால் முட்டியில் பழைய காயத்தழும்பும் உள்ளது. வலது கையில் அம்மா என்று கன்னடத்திலும், கோலி என்று ஆங்கிலத்திலும் பச்சை குத்தியுள்ளார்.

இதனால் அவர் கர்நாடகத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரை அடித்து கொலை செய்த மர்ம நபர்கள், உடலை தனியார் நிலத்தில் வீசி சென்றிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரது புகைப்படத்தை  கர்நாடக மாநில போலீசாருக்கு அனுப்பி வைத்துள்ள தளி போலீசார், கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் எனவும், அவரை அடித்து  கொன்ற கொலையாளிகள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Karnataka ,Thali ,
× RELATED கோயம்பேட்டில் பரபரப்பு வீடு புகுந்து...