×

சித்திரை திருவிழா வேப்பிலை மாரியம்மன் கோயிலில் வேடபரி நிகழ்ச்சி ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

மணப்பாறை, மே 14:  மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி நேற்று நடந்த வேடபரி நிகழ்ச்சியில் குதிரை வாகனத்தில் அம்மன் வீதியுலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை வேப்பிலை மாரியம்மன்  கோயில் சித்திரை பெருந்திருவிழா கடந்த மாதம் 21ம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து  காப்பு கட்டுதல் நிகழ்ச்சி, பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் விமரிசையாக நடந்தது. இதனையடுத்து, திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வேடபரி நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.


இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பின்னர் அம்மனை அங்கிருந்த குதிரை வாகனத்தில் எழுந்தருள செய்தனர். பின்னர் , பட்டியூர் கிராம முக்கியஸ்தர்கள் தலைமையில் இளைஞர்கள் ஆட்டம், பாட்டத்துடன் கோயிலை சுற்றி வந்த பின் கோயிலுக்குள் சென்றனர். இதைத்தொடர்ந்து பரம்பரை அறங்காவலர் வீரமணி மற்றும் கோயில் செயல் அலுவலர்  பிரபாகர் ஆகியோருக்கு கோயில் வழக்கப்படி மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் கோயில் அறங்காவலர்கள், நிர்வாகிகள், சுற்று வட்டார பகுதிகளின் கிராம முக்கியஸ்தர்கள் முன்னே செல்ல அதைத்தொடர்ந்து இளைஞர்கள் குதிரை வாகனத்தை சுமந்து கொண்டு வெளியே வந்தனர். கோயிலின் முன்பு மூன்று முறை முன்னும், பின்னும் சென்ற பின் அங்கிருந்து ராஜவீதிகளின் வழியாக சென்று மீண்டும் கோயிலுக்கு அம்மன் வீற்றிருந்த குதிரை வாகனத்தை சுமந்து வந்தனர். குதிரை வாகனம் சென்ற வழிநெடுக ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி கும்பிட்டதோடு, தங்களின் கைகளில் இருந்த மாலைகளை சாமி மீது போட்டனர். வேடபரி நிகழ்ச்சி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். வேடபரி நிகழ்ச்சிக்கு முன்னதாக நேற்று காலை ஏராளமான பெண்கள் மாரியம்மன் கோயிலின் முன்புறம் மற்றும் முனியப்பன் கோயில், காளியம்மன் கோயில் ஆகிய இடங்களில் பொங்கல் வைத்தும், கிடா வெட்டியும் சிறப்பு வழிபாடு நடத்தினர். அதிகாலையில் ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் அம்மனை வழிபட்டனர்.

Tags : Devotees ,ceremony ,Vedapari ,Mariyamman Koil ,
× RELATED திருப்பதி கோயிலில் ரூ.4.23 கோடி உண்டியல் காணிக்கை