×

வீரபாண்டி ஒன்றியத்தில் இசேவை மையங்களில் சான்றிதழ் பெறுவதில் சிக்கல்

ஆட்டையாம்பட்டி, மே 9:  வீரபாண்டி ஒன்றியத்தில் சரிவர செயல்படாத இசேவை மையங்களால் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வீரபாண்டி ஒன்றியத்தில் வீரபாண்டி, ராஜாபாளையம், கடத்தூர், பைரோஜி, வேம்படிதாளம், இளம்பிள்ளை, பெருமாக்கவுண்டம்பட்டி, கல்பாரப்பட்டி, கீரபாப்பம்பாடி, எஸ்.பாப்பாரப்பட்டி, கரிச்சிப்பட்டி மற்றும் புத்தூர் அக்ரஹாரம் என 12 இடங்களில் உள்ள கூட்டுறவு சொசைட்டி சங்கத்தில் உள்ள இசேவை மூலம் மையம் மூலமாக மாணவ, மாணவிகளுக்கு தேவையான அனைத்து விதமான சான்றிதழ்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

தற்போது, பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதியுள்ள மாணவ, மாணவிகள்  மேற்படிப்புக்கு தேவையான வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ் மற்றும் முதல் பட்டதாரி சான்றிதழ்களை வாங்க இசேவை மையத்தில் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், சான்றிதழ்கள் பெற இசேவை மையத்தில் பதிவு செய்யும் பொழுது சர்வர் பிரச்சனை எனக்கூறி சான்றிதழ்கள் பதிவு செய்வதில் பெரும் காலதாமதம் ஏற்படுகிறது. நாளொறுக்கு பத்துக்கு குறைவான சான்றிதழ்களே பதிவு செய்யப்பட்டு வருகிறது.

மேலும், இசேவை மையங்களில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் இல்லாத நிலையில் சங்கத்தின் பனியார்களே சான்றிதழ் பதிவு செய்து வருவதால், மாணவர்களின் அவசரம் கருதி வேலை செய்வதில்லை. அவசரப்படுத்தினால், சரிவர பதிலளிக்காமல், வேறு மையத்துக்கு செல்லுங்கள் என கூறி விரட்டி வருவதால், மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இசேவை மையங்களில் சான்றிதழ் பதிவு செய்வதற்கு என தனிநபர் நியமிக்க வேண்டும். சான்றிதழ்கள் பதிவு செய்வதில் ஏற்படும் கால தாமதத்திற்கு தீர்வு காண தனியாக முகாம் நடத்த வேண்டும். வீரபாண்டி ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் செயல்படாத இசேவை மையத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றனர்.

Tags : ISS ,centers ,
× RELATED கடலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி..!!