×

கிருஷ்ணகிரி அணையில் முழுவதுமாக தெரியும் கோயில் ஊஞ்சல் மாடம்

கிருஷ்ணகிரி, மே 8:  கிருஷ்ணகிரி அணையில் 40 ஆண்டுக்கு பின்பு வெளியே தெரிந்த கோயில் ஊஞ்சல் தூண்களை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றவாறு உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தை வளம் கொழிக்கச்செய்யும் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை குறைந்ததால் கிருஷ்ணகிரியில் உள்ள கேஆர்பி அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்தது. தற்போது, அணை முற்றிலும் வறண்டு காணப்படுகிறது.

40 ஆண்டுக்கு பின்பு அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால் தண்ணீருக்குள் மூழ்கி கிடந்த புரதான சின்னங்கள் வெளியே தெரிய தொடங்கின. கடந்த 300 ஆண்டுக்கு முன்பு அணையின் மேற்கு பகுதியில் உள்ள பழைய பேயனப்பள்ளி கிராம மக்கள் மண்டு மாரியம்மன் கோயிலைக் கட்டி அதன் முன் பகுதியில் சாமியை தாலாட்ட 30 அடி உயரத்தில் கருங்கல்லால் ஆன இரண்டு ஊஞ்சல் தூண்களையும் அமைத்திருந்தனர். இப்பகுதியைச் சுற்றி இருந்த கிராம மக்கள் ஒன்று கூடி திருவிழா நடத்தி அம்மனை ஊஞ்சலில் தாலாட்டி வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த 1952ம் ஆண்டு, இக்கோயில் உள்பட பல ஏக்கர் நிலங்களை அணை கட்ட அரசு கையப்படுத்திக் கொண்டது. இங்கு அணையைக் கட்டி நீர் தேக்கிய பிறகு மண்டு மாரியம்மன் கோயில் பகுதி முழுவதும் நீரில் மூழ்கியது. சிறிய கருaங்கற்களை கொண்டு கட்டிய கோயில் கட்டிடம் நாளடைவில் தண்ணீரில் கரைந்து காணாமல் போனது.

ஆனால், பெரிய கருங்கற்களை கொண்டு அமைக்கப்பட்ட இரண்டு ஊஞ்சல் தூண்கள் மட்டும் இன்றும் அப்படியே கம்பீரமாக நிற்கிறது. 40 ஆண்டுகளாக அணையில் தண்ணீர் இருந்ததால் பார்க்க முடியாமல் இருந்த ஊஞ்சல் தூண்கள் தற்போது அணை வறண்டதால் முழுமையாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக அந்த தூண்களை வந்து பார்த்து சென்றவாறு உள்ளனர்.

Tags : Krishnagiri Dam ,
× RELATED சாத்தனூர் அணை நீர்மட்டம் 117.85 அடியாக...