×

சேலம் மாவட்டத்தில் தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு மறுப்பு

சேலம், ஏப்.30: சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு நேற்று மதியம், பள்ளப்பட்டி, சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட பெற்றோர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் வெங்கடேஷ், குருபிரசன்னா ஆகியோருடன் வந்தனர். அவர்கள், கல்வி அலுவல அதிகாரிகளிடம், தங்கள் குழந்தைகளுக்கு சேலத்தில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீடு தர மறுக்கிறார்கள் எனக்கூறி முறையிட்டனர். அதற்கு அலுவலர்கள், முறைப்படி ஆன்லைனில் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தினர். பின்னர், அவர்களிடம் கோரிக்கை மனுவை பெற்றோர்கள் கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  நடப்பு கல்வியாண்டிற்கு இலவச கட்டாய கல்விச்சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

ஆனால், பெரும்பாலான சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீடு மறுக்கின்றனர். 3 ரோட்டில் உள்ள ஒரு பள்ளியில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தினர். ஆனால், ஆன்லைன் லிங்க் திறக்கவில்லை. இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, மாவட்ட கல்வி அலுவலரிடம் கடிதம் வாங்கி வர கூறியுள்ளனர். கடிதம் வந்தால், விண்ணப்பத்தை பெற்றுக்கொள்கிறோம் என கூறுகின்றனர். 25 சதவீத இடஒதுக்கீடு சேர்க்கை மாணவர்களுக்கான கட்டணம், அரசிடம் இருந்து முறையாக வருவதில்லை. அதனால் தற்போது, எல்கேஜிக்கு ₹10,500 செலுத்துங்கள் என கூறி விட்டனர். அதனால், ஏழை மாணவர்கள், 25 சதவீத இடஒதுக்கீட்டில் படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக கட்டணம் வசூலிப்பதையும் தடுக்க  வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Tags : schools ,CBSE ,Salem district ,
× RELATED மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்