×

‘பானி’ புயல் எச்சரிக்கை எதிரொலி குமரியில் மீன்பிடி தொழில் அடியோடு பாதிப்பு ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்புகின்றனர்

நாகர்கோவில், ஏப். 28: பானி புயல் எச்சரிக்கை எதிரொலியாக குமரி மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை பானி புயலாக வலுப்பெறும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று குமரி மாவட்ட மீன்துறையால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. தென் தமிழக கடல் பகுதிகளில் வரும் 28ம் தேதி முதல் மணிக்கு 100 முதல் 115 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்க கடல், இலங்கை மற்றும் தமிழகத்திற்கு இடையான கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 30ம் தேதி வரை காற்றின் வேகம் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் 28ம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் கரை திரும்பிய வண்ணம் உள்ளனர். தேங்காப்பட்டணம், குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுக பகுதியில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதால் அவர்கள் கரை திரும்பியவண்ணம் உள்ளனர். ஆனால் அரபிக்கடல் பகுதியில் மீன்பிடிக்கின்ற மீனவர்களுக்கு இந்த அறிவிப்பு வழங்கப்படாததால் அவர்கள் தொடர்ந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் பேரிடர் மேலாண்மை மற்றும் இன்னல்கள் தொடர்பான விபரங்களை அறிய ஏதுவாத தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள டிஎன் ஸ்மார்ட் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து புயல், கனமழை, வெள்ளம், பேரிடர் தொடர்பான எச்சரிக்கை, காலநிலை, மழை அளவு உள்ளிட்ட அனைத்து பேரிடர் நிகழ்வுகளையும் அறிந்துகொள்ளலாம் என்று குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே அறிவித்தார். பானி புயல் எச்சரிக்கையை தொடர்ந்து விவசாயிகள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாகவும் அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும் தென்னை மரங்களில் தேங்காய், இளநீர், பச்சை, காய்ந்த ஓலைகளை வெட்டி அகற்ற வேண்டும். காற்றின் வேகத்தினால் மரம் முழுவதும் அடியோடு சாய்வதற்கோ, முறிந்து விழுவதற்கோ வழிவகுக்கும் என்பதால் இதனை மேற்கொள்ள வேண்டும். நான்கு நாட்களுக்கு விவசாயிகள் தென்னந்தோப்புகளுக்கு நீர்ப்பாய்ச்சுவதை நிறுத்த வேண்டும். மா, பலா, முந்திரி போன்றவற்றில் கவாத்து செய்து மரம் வேரோடு சாய்ந்து விடுவதை தவிர்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Fishermen ,sea ,Bani ,
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...