×

வேப்பனஹள்ளி அருகே ஐந்து கிராம மக்கள் இணைந்து

நடத்திய சாக்கியம்மன் திருவிழாகிருஷ்ணகிரி,  ஏப்.25: வேப்பனஹள்ளி அருகே 5 கிராம மக்கள் இணைந்து  நடத்திய சாக்கியம்மன், மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஆயிரத்திற்கும்  மேற்பட்ட ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள் வழிபட்டனர். கிருஷ்ணகிரி  மாவட்டம் வேப்பனஹள்ளி ஒன்றியம் குட்டப்பள்ளி, சீலேப்பள்ளி, பலேரிப்பள்ளி,  நாரணிகுப்பம், கோடிப்பள்ளி ஆகிய 5 கிராம மக்கள் இணைந்து, ஆண்டுதோறும்  சாக்கியம்மன், மாரியம்மன் கோயில் திருவிழாவை நடத்தி வருகின்றனர். இந்த  ஆண்டு திருவிழா, கடந்த 20ம் தேதி திம்மராய சுவாமிக்கு பூஜை செய்து, பட்டாளம்மன் கோயிலில் கொடியேற்றுதலுடன்  துவங்கியது. இதையொட்டி, 21ம் தேதி பட்டாளம்மனுக்கு மாவிளக்கு  எடுத்தல், குட்டப்பள்ளி கிராமத்தில் சாக்கியம்மன் கரகம் அமர வைத்தல், மண்டு  மாரியம்மன் கோயிலில் கூழ் ஊற்றுதல்,  மாரியம்மன்,  கங்கையம்மன், கூத்தாண்டப்பனுக்கு மா விளக்கு எடுத்தல் ஆகியவை  நடந்தது.

 அதை தொடர்ந்து, 23ம் தேதி 5 கிராமங்களிலும் உள்ள மாரியம்மனுக்கு மாவிளக்கு  எடுத்தல், பீரப்பன் சுவாமியை அழைத்து  வருதல் நடந்தது.
விழாவின், முக்கிய நாளான நேற்று (24ம் தேதி)  காலை பீரப்பன் சுவாமிக்கு அபிஷேகம், தலை மீது தேங்காய் உடைத்தல்  நிகழ்ச்சி நடந்தது. பின்னர், மாவிளக்கு ஊர்வலம்  குட்டப்பள்ளிக்கு வந்தடைந்ததும், கரக பூஜை நடந்தது.  பின்னர், கரகம், பீரப்ப சுவாமி, 5 கிராம மக்களின் மாவிளக்கு  சாக்கியம்மன் கோயிலை அடைந்து, சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு,  ஆயிரத்திற்கு அதிகமான ஆடுகள் மற்றும் கோழிகளை பலியிட்டு, உறவினர்கள்  மற்றும் நண்பர்களுக்கு விருந்தளித்தனர். இன்று (25ம் தேதி)  மதியம் 2 மணிக்கு குட்டப்பள்ளி மண்டில் எருதாட்டம்,  மாலை 6 மணிக்கு பீரப்ப சுவாமி கரகாட்டம், இரவு 9 மணிக்கு வாண  வேடிக்கை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

Tags : Veppanahalli ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் 1089 போலீசார் பாதுகாப்பு