காஞ்சிபுரம், ஏப்.8:காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் கடந்த 3 ஆண்டுகளாக பொறியியல் படிப்பிற்கான தகுதித் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற இந்தத் தேர்வில் சுமார் 2500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். இந்தத் தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு நான்கு ஆண்டு பொறியியல் படிப்பிற்கான கட்டணம் முற்றிலும் சலுகை அளிக்கப்படும். இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் 40 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் சேகர் தலைமை தாங்கினார். தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழும நிர்வாக இயக்குநர் முரளி மாணவர்களின் பெற்றோர்களை கௌரவப்படுத்தினார். இதில் சிறப்பு விருந்தினராக திருக்கழுக்குன்றம் தாசில்தார் வரதராஜன் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் தனலட்சுமி சீனிவாசன் கலைக்கல்லூரி முதல்வர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்தத் தகுதித் தேர்வின் மூலம் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களும் பொறியியல் படிப்பில் சேர்ந்து பயன்பெற தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி வாய்ப்பளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
