×

கோடையில் தண்ணீர் திறந்து விட்டு மீன்பிடிப்பு குளத்தில் இறங்கி பொதுமக்கள் தர்ணா வெள்ளமடத்தில் பரபரப்பு

ஆரல்வாய்மொழி, ஏப். 4 : வெள்ளமடம் அகஸ்தியர் குளத்தில் உள்ள தண்ணீரை சட்டவிரோதமாக வெளியேற்றி மீன்பிடித்த கும்பலை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் குளத்தில் இறங்கி தர்ணாவில் ஈடுபட்டனர்.
 வெள்ளமடம் பீமநகரி ஊராட்சி அண்ணா நகர் பகுதியில் அகஸ்தியர் குளம் உள்ளது. இக்குளத்திற்கு வெள்ளமடம் புத்தனார் கால்வாயில் இருந்து தண்ணீர் வருகின்றது. மேலும் இக்குளத்தில் உள்ள தண்ணீர் மின் மோட்டார் மூலம் உறிஞ்சப்பட்டு பீமநகரி ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளமடம், கரையான்குழி, சிறிய அண்ணா நகர், பெரிய அண்ணா நகர், வேம்பத்தூர் காலனி, ராஜீவ் நகர், பீமநகரி போன்ற பகுதிகளுக்கு குடி நீராக விநியோகம் செய்யப்படுகிறது. இக்குளத்திற்கு புத்தனார் கால்வாயில் இருந்து தண்ணீர் வருவதால் இக்குளம் கோடை காலங்களிலும் வற்றாத குளமாக காணப்பட்டது. இந்நிலையில் தற்போது  அணைகள் மூடப்பட்டதால் புத்தனார் கால்வாயில் தண்ணீர் வருவது நின்று விட்டது.இதனால் குளத்தின் நீர்மட்டமும் குறைந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலர் இக்குளத்தில் உள்ள தண்ணீரை திறந்து விட்டதாக கூறப்படுகிறது. அப்போது அப்பகுதி பொதுமக்கள் தட்டிக்கேட்டபோது, இக்குளத்தில் உள்ள மீன்களை பிடிப்பதற்காக திறந்து விடுவதாகவும், மீன்களை பிடித்த உடன் அதிகாரிகளிடம் பேசி மீண்டும் புத்தனார் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளனர். இதனால் பொதுமக்களும் அவர்கள் சொல்வதை நம்பி இருந்துள்ளனர்.

 ஆனால் அந்த கும்பல் சட்டவிரோதமாக குளத்தில் உள்ள குடிதண்ணீரை வெளியேற்றி மீன்களை பிடித்து விட்டு, மீண்டும் குளத்திற்கு தண்ணீர் வருவதற்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சட்டத்திற்கு விரோதமாக குளத்தில் தண்ணீரை வெளியேற்றி மீன்பிடித்த கும்பலை உடனே கைது செய்ய வேண்டும் என பொதுபணித் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து நேற்று முன்தினம் பொதுமக்கள் குடத்துடன் பீமநகரி ஊராட்சி அலுவலகத்தில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.   அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து கலைந்து சென்றனர். ஆனால் அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து நேற்று காலை தோவாளை ஒன்றிய பா.ஜ செயற்குழு உறுப்பினர் ஐயப்பன் தலைமையிலும், வெள்ளமடம், பீமநகரி பா.ஜ கேந்திர தலைவர்கள் செந்தில், முத்துகுமார் முன்னிலையிலும் பொதுமக்கள் குளத்தின் நடுப்பகுதிக்கு சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இத்தகவல் அறிந்ததும் ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் சுகதேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags : fishing pond ,darna ,
× RELATED கணவரின் 2வது திருமணத்தை தடுக்க கோரி 4...