மதுரை, ஏப்.3: மதுரையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலால் அம்மை நோய் வருகிறது. மதுரையில் நாளுக்கு நாள் வெயிலின் கொடூரம் அதிகரித்து வருகிறது. 100 டிகிரியைத் தாண்டியே வெயில் அடிக்கிறது. இரவிலும் அனல் காற்று வீசுகிறது. இந்த தொடர் வெயிலால் பல்வேறு கோடை கால நோய்கள் பரவி வருகிறது. குறிப்பாக கோடையால் தற்போது மதுரை மாவட்டத்தில் அம்மை நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. உடலின் எதிர்ப்பு சக்தி அம்மை நோயிலிருந்து விடுவிக்கும் ஆற்றல் கொண்டது. நம் முன்னோர்கள் அம்மை நோய் கொண்டோரை தனிமைப்படுத்தி, வேப்பிலை கட்டி வீட்டை அடையாளப் படுத்தி, இடத்தை சுத்தமாக வைத்து, வேப்பிலை படுக்கையில் படுக்க வைப்பர். மஞ்சள் தூள், வேப்பிலை என கிருமி நாசினியான இவை கலந்த நீரில் கை, கால்களை சுத்தம் செய்து விட்டுத்தான் வீட்டுக்குள் செல்வர். சில தினங்கள் கழித்து, அம்மை பாதித்த வரை, மஞ்சள் தூள், வேப்பிலை கலந்த தண்ணீரால் குளிக்கச் செய்வர். அப்போது உடலில் ஏற்பட்ட கொப்புளத்தின் `பக்குகள்’ விழுந்துவிடும். அதன் பின்னரே அவரை மற்றவர்களுடன் சேர்த்துக் கொள்வர். இந்த நடைமுறை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்த வருகிறது.
மதுரை அரசு மருத்துவமனை டாக்டர் பாலாஜிநாதன் கூறும்போது, ``கடும் காய்ச்சல், தோலில் அரிப்பு, தடிப்பு மற்றும் கொப்புளம் ஏற்படுதல், கடுமையான உடல்வலி, நாக்கு வறண்டு போதல் போன்றவையே அம்மை நோயின் முதற்கட்ட அறிகுறிகள். உடலில் உள்ள நீர் சத்தும் குறையும். அம்மை நோய் பரவும் தன்மை உடையது என்பதால், இந்த அறிகுறிகளால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக தனிமை படுத்த வேண்டும். குடிநீர் அதிகம் குடிக்க வேண்டும். நல்ல ஓய்வு மற்றும் நோய் தொற்று வராமல் இருக்க, டாக்டரின் அனுமதியுடன் மருத்துகள் அவசியம்’’ என்றார். மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் நலத்துறை தலைவர் டாக்டர் பாலசங்கர் கூறும்போது, ``அம்மை நோய் என்பது வைரஸ் கிருமியால் பரவக்கூடிய ஒரு நோயாகும். குறிப்பாக மணல்வாரி அல்லது தட்டம்மை (மெசல்ஸ்), கொப்புளிப்பான்(சிக்கன் பாக்ஸ்) மற்றும் பொன்னுக்கு வீங்கி(மும்ப்ஸ்) போன்ற அம்மை நோய்களே அதிகம் பரவக்கூடியது. மணல்வாரி அம்மை தடிப்பு தடிப்பாக இருக்கும், பொன்னுக்கு வீங்கி என்ற அம்மை நோய், முகத்தில் உள்ள தாடைக்கு கீழ் பகுதியில் நெறிக்கட்டியது போல் இருக்கும். இதை அம்மைக்கட்டு என்றும் சொல்வார்கள். கொப்புளிப்பான் அம்மை என்பது கொப்புளம் கொப்புளமாக இருக்கும். இந்த அம்மை நோய்கள் 9 மாத குழந்தை முதல், பாலின வேறுபாடின்றி எந்த வயதினருக்கும் வரலாம். மணல்வாரி அல்லது தட்டம்மை நோய்க்கு வைட்டமின் `ஏ’ மாத்திரைகள், கொப்புளிப்பான் அம்மைக்கு `அசைக்ளோவிர்’ என்ற நோயின் தீவிரம் குறைக்கும் மாத்திரைகள் உள்ளன’’ என்றார்.
ஜிஹெச்சிக்கு வாங்க... -டீன்
மதுரை அரசு மருத்துவமனை டீன் வனிதா கூறும்போது, ``தற்போது வெயில் காலம் என்பதால், அம்மை நோய்கள் பரவும் வாய்ப்பு அதிகம். மதுரை அரசு மருத்துவமனையில், அம்மை ேநாய்க்கான சிறப்பு மருந்துகள் கையிருப்பில் உள்ளன. இந்நோய் பரவும் தன்மை உடையது என்றாலும், இங்கு, தனி வார்டு தயார் நிலையில் உள்ளது. நோயின் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உறுதி செய்து விட்டால், தாமதமின்றி அருகேயுள்ள அரசு மருத்துவமனைக்கு வரவும். மதுரை அரசு மருத்துவமனையில் அம்மை பாதித்தவர்களுக்கான ஆலோசனைகளும் சிகிச்சையும் இலவசமாக தரப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களோ உறவினர்களோ பயப்படத் தேவையில்லை’’ என்றார்.
