மதுரை, ஜன. 12: யூனியன் வங்கி தனது அனைத்து மண்டல மற்றும் பிராந்திய மேலாளர்களுக்கான வணிக ஆய்வுக் கூட்டத்தை ஜன. 16, 17ம் தேதிகளில் லக்னோவில் நடத்தத் திட்டமிட்டிருந்தது. தமிழகத்தின் மிக முக்கியமான கலாச்சார மற்றும் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் திருவிழா ஜன. 14 முதல் 17ம் தேதி வரை கொண்டாடப்படுவதை சுட்டிக்காட்டி, மதுரை மார்க்சிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், யூனியன் வங்கியின் தலைவருக்கும் கடிதம் எழுதியிருந்தார்.
தற்போது, இந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து, எக்ஸ் தளத்தில் எம்பி சு.வெங்கடேசன், ‘‘யூனியன் வங்கி அனைத்து மண்டல மற்றும் பிராந்திய மேலாளர்கள் ஆய்வுக் கூட்டத்திற்காக ஜனவரி 15ம் தேதி லக்னோ வந்தடைய வேண்டுமென சுற்றறிக்கை அனுப்பியதை கண்டித்து கடிதம் எழுதியிருந்தேன். இந்த ஆய்வுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சி. வங்கி அலுவலர்களுக்கு பொங்கல் திருநாள் வாழ்த்துகள்’’ என்று பதிவிட்டுள்ளார்.
