×

திருப்பட்டூர் கோயிலில் பங்குனி தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

மண்ணச்சநல்லூர், மார்ச் 21: திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் பங்குனி தேரோட்டம் நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். பிரம்மனுக்கு அருள் புரிந்து பிரம்மாவின் தலையெழுத்தையே மாற்றியமைத்த சிறப்பு வாய்ந்த திருத்தலம் சிறுகனூர் அருகே உள்ள திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி தேர்திருவிழா இவ்வாண்டு கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பங்குனி தேர்திருவிழாவின் 2ம் நாள் விழாவில் சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் மயில் வாகனத்திலும் எழுந்தருளினர். 3ம் திருநாளில் எதுமலை கிராம பொதுமக்கள் சார்பிலும், 4ம் திருநாள் வெள்ளக்கல்பட்டி ஆறுநாட்டு வெள்ளாளர்கள் சார்பிலும், 5ம் திருநாள் பாலையூர் கிராம பொதுமக்கள் சார்பிலும் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து யானை, குதிரை, வாகனங்களில் சுவாமி எழுந்தருளினர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் நேற்று காலை 9 மணியளவில் நடைபெற்றது. விநாயகர், முருகன், வள்ளி தெய்வானை எழுந்தருளிய தேர் முன்னாள் செல்ல பிரம்மபுரீஸ்வரர் அம்பாளுடன் எழுந்தருளிய தேரும், சண்டிகேஸ்வரர் எழுந்தருளிய தேரும் அடுத்தடுத்து சென்றது. திரளான பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்து சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் முத்துராமன், கோயில் அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags : Meeting ,devotees ,
× RELATED வீட்டுமனை பட்டா வழங்குவதில் உள்ள...