×

வீட்டுமனை பட்டா வழங்குவதில் உள்ள இடர்பாடுகளுக்கு தீர்வு காண உயர்நிலை குழு முதல் கூட்டம்: விரைந்து வழங்க அதிகாரிகளுக்கு அறிவுரை

சென்னை: வீட்டுமனைப் பட்டா வழங்குவதில் உள்ள இடர்பாடுகளுக்கு தீர்வு காண அமைக்கப்பட்ட மாநில அளவிலான உயர்நிலை குழுவின் முதல் கூட்டத்தில் பொதுமக்களுக்கு விரைவாக பட்டா வழங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில், வீட்டுமனைப் பட்டா வழங்குவதில் உள்ள இடர்பாடுகளுக்கு தீர்வு காண அமைக்கப்பட்ட மாநில அளவிலான உயர்நிலை குழுவின் முதல்கூட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்தது.

அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு, எம்எல்ஏக்கள் ஐட்ரீம் மூர்த்தி, நா.எழிலன், ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சிமுருகன் கலந்து கொண்டனர். குழுவில், சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட மனைகளுக்கு பட்டா வழங்குவது, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட மனைகளுக்கு பட்டா வழங்குவது,

ஒருமுறை வரன்முறை செய்யும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாக்களை வருவாய் ஆவணங்களில் பதிவேற்றம் செய்வது, சென்னை கிராம நத்தம் நிலங்களில் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்குவது மற்றும் பெருநகர சென்னை வளர்ச்சி குழும மனையிடங்களுக்கு பட்டா வழங்குதலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கூட்டத்தில், வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட வேண்டியுள்ள பொதுமக்களுக்கு விரைவாக பட்டா வழங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

இதில், முதல்வரின் செயலாளரும், வளர்ச்சி ஆணையருமான முருகானந்தம், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் காகர்லா உஷா, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர் ராஜாராமன், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை செயலாளர் தாரேஸ் அகமது மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post வீட்டுமனை பட்டா வழங்குவதில் உள்ள இடர்பாடுகளுக்கு தீர்வு காண உயர்நிலை குழு முதல் கூட்டம்: விரைந்து வழங்க அதிகாரிகளுக்கு அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil ,Nadu ,Government ,Dinakaran ,
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...