×

கரூர் பேருந்து நிலையத்தில் வாக்குப்பதிவு சரிபார்க்கும் இயந்திரம் செயல்விளக்கம் குறும்படங்கள் திரையிட்டு விழிப்புணர்வு

கரூர், மார்ச் 14:   நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து வாக்காளர்களுக்கு விளக்கும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கையாக செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன எல்இடி வீடியோ வாகனம் மூலம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கும் வகையிலான விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடும் நிகழ்வு கரூர் பேருந்து நிலையத்தில் நேற்று நடைபெற்றது.  தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கலெக்டர் அன்பழகன், கரூர் மாவட்ட எஸ்பி ராஜசேகரன், துணை தேர்தல் நடத்தும் அலுவலரும் டிஆர்ஓவுமான சூர்யபிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் விழிப்புணர்வு குறும்படங்களை பொதுமக்களோடு பார்வையிட்டார். பின்னர் கலெக்டர் கூறியது: மக்களவை பொதுத்தேர்தலில் 18வயது பூர்த்தியடைந்த ஒவ்வொரு வாக்காளரும் விடுபடாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும், இந்த தேர்தலில் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை அவர்களுக்கு மட்டும் தெரிவிக்கும் வகையில் அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் அமைக்கப்பட்டுள்ள வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவைகளை அனைத்து பகுதியிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திரையிடப்பட உள்ளது. பறக்கும் படைகள் இரவுபகலாக 24 மணி நேரமும் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். வாகன சோதனையின்போது பொதுமக்கள் ரூ.50 ஆயிரம் வரை எடுத்து செல்ல இந்திய தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது. அதற்கு மேல் பணம் எடுத்து சென்றால் உரிய ஆவணங்களுடன் எடுத்து செல்ல வேண்டும். உரிய ஆவணங்கள் இல்லாமல் பணமோ, பரிசுபொருட்களோ எடுத்து சென்றால் அவை பறிமுதல் செய்யப்படும்.தேர்தல் தொடர்பாக புகார் அளிக்க விரும்பும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசிஎண் 1950 என்ற எண்ணிற்கு தெரிவிக்கலாம்.

அதுமட்டுமல்லாது இந்தியத்தேர்தல் ஆணையம் சிவிஜில் என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியை அனைவரும் உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்துகொண்டு வாக்காளருக்கு பணம் பொருள் பட்டுவாடா உள்ளிட்ட தேர்தல் விதிமீறல்கள் நடப்பதை அறிந்தால் அதை உடனே இந்த செயலியின் மூலம் வீடியோவாக பதிவிட்டால் 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். நேர்மையான, வெளிப்படையான தேர்தல் நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.  வாக்குப்பதிவு இயந்திரங்களில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பதையும், இந்த தேர்தலில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை அவர்களுக்கு மட்டும் தெரிவிக்கும் வகையிலான வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை இயந்திரம் (விவிபாட்) இயங்கும் விதம் குறித்தும் வாக்காளர்களுக்கு விளக்கும் வகையில் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. எவ்வாறு வாக்காளிப்பது, தணிக்கை இயந்திரத்தின் செயல்பாடு குறித்து கலெக்டர் விளக்கினார். மேலும் பொதுமக்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களித்து பார்த்து, அது அணிக்கை இயந்திரத்தில் சரியாக பதிவு காட்டப்படுகிறதா என்பதையும் தெரிந்துகொண்டனர். இதில் ஆர்டிஓ சரவணமூர்த்தி, ஏடிஎஸ்பி பாரதி, நகராட்சி ஆணையர்(பொ) ராஜேந்திரன், தாசில்தார் பிரபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : Karur ,bus stand ,
× RELATED கரூர், திருச்சி பைபாஸ் பகுதியில் கனரக வாகனங்களை நிறுத்தக்கூடாது