×

ஓசூர் நகர் பகுதியில் அனுமதியின்றி விளம்பர பலகை வைத்தால் ஓராண்டு சிறை

ஓசூர்,பிப்.26:  ஓசூர் நகர் பகுதியில், அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைத்தால், சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஓராண்டு சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று ஓசூர் ஆணையாளர் பாலசுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஓசூர் நகர் பகுதியில், விளம்பர பலகைகள் வைப்பதற்கான விதிமுறைகள் குறித்து அரசியல் கட்சி நிர்வாகிகள், டிஜிட்டல் பேனர் மற்றும் அச்சக உரிமையாளர்கள், காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நேற்று, நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது: ஓசூர் நகர் பகுதிகளில், விளம்பர தட்டிகள், பேனர்கள் வைப்பதற்கு முன் நகராட்சியில் அனுமதி கட்டணம் 100 மற்றும் வைப்பு தொகை 50 செலுத்த வேண்டும். பின்பு விளம்பர தட்டிகள், பேனர்கள் வைக்க உள்ள இடத்தின் உரிமையாளர் மற்றும் காவல் நிலையத்தில் தடையின்மை சான்று பெற்ற பின், நகராட்சி கட்டண ரசீதுடன் இணைத்து சுற்றுச் சார்பு வரைபடத்துடன் மாவட்ட கலெக்டரின் அனுமதிக்காக விண்ணப்பிக்க வேண்டும்.

விளம்பர தட்டிகள் மற்றும் பேனர்கள் வைக்க 6 நாட்கள் மட்டுமே அனுமதி. கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை அருகே பேனர்கள் வைக்க கூடாது. மற்றும் நடைபாதைகளில் ஒரு பக்கத்தில் மட்டும் விளம்பர தட்டிகள் வைக்க வேண்டும். விளம்பர தட்டிகள், பேனர்கள் விழுந்து விபத்து ஏற்பட்டால் வைத்தவர்கள், அச்சடித்தவர்கள் இருவருக்கும் தண்டனை வழங்கப்படும்.  மேலும் அனுமதியின்றி விளம்பர தட்டிகள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டது தெரியவந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஓராண்டு சிறை தண்டனை ₹5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். எனவே, விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் 2018ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி உத்தரவிட்டுள்ளது.
ஆகவே அனைவரும் விதி முறைகளை தவறாது பின் பற்ற வேண்டும் என்று ஆணையாளர் கூறினார். கூட்டத்தில் நகர அமைப்பு அலுவலர் சீனிவாசன், நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் உமாசங்கரி, இன்ஸ்பெக்டர்கள் டவுன் லட்சுமணதாஸ், சிப்காட் சரவணன், எஸ்ஐகள் பார்த்திபன், கண்ணன், திமுக முன்னாள் கவுன்சிலர் எல்லோரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : town ,Hosur ,
× RELATED நெல்லை டவுன் ரத வீதியில் தேநீர்...