×

நித்திரவிளை அருகே தாமிரபரணி ஆற்றங்கரையில் ஐஸ் பிளான்ட் அமைக்க எதிர்ப்பு கஞ்சிகாய்ச்சி போராட்டம்

நித்திரவிளை, பிப். 12: நித்திரவிளை அருகே பள்ளிக்கல் பகுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் தனியார் ஐஸ் பிளாண்ட் அமைக்க அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர், முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் புகார் கொடுத்துள்ளனர். மேலும், நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த வருடம் மே மாதம் ஐஸ் பிளான்ட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் அனைத்துக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று இரு வாகனத்தில் சிலர் ஐஸ் பிளாண்ட் அமைக்கும் பணிக்காக வந்துள்ளார். தகவல் அறிந்ததும் ஆண்கள், பெண்கள் என ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். பதற்றமான நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஐஸ் பிளான்ட் அமைக்க வந்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
 மேலும் அங்கு குவிந்த பொதுமக்கள், ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சவேரியார் அடிமை என்பவர் தலைமையில், ஓய்வுபெற்ற ஆசிரியர் ஜெயக்குமார் முன்னிலையில் பிரச்னைக்குரிய நிலத்தின் முன் திரண்டு ஐஸ் பிளான்ட் அமைக்க விடமாட்டோம் என கோஷம் எழுப்பினர்.
இது சம்பந்தமாக ஐஸ் பிளான்ட் எதிர்ப்பாளர்கள் கூறும்போது, இந்த பகுதி குடியிருப்புகள் நிறைந்த பகுதி. அதுமட்டுமல்ல ஆற்றின் கரையில் ஐஸ் பிளான்ட் அமைத்தால், அங்கிருந்து வெளியேறும் கழிவுகளால் பொதுமக்கள் ஆற்றுநீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளோம். பள்ளிக்கல் பகுதியைச் சேர்ந்த ஜோஸ் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கும் தொடர்ந்துள்ளார். இருந்த போதும் அடியாட்கள் மூலம் ஐஸ் பிளான்ட் அமைக்க முயற்சி நடக்கிறது. எங்கள் வாழ்வாதாரத்தை இழந்து ஒருபோதும் எந்த ஒரு தொழிற்சாலையையும் இந்த பகுதியில் வர அனுமதிக்க மாட்டோம் என்றனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அந்த பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் கஞ்சி காய்ச்சி குடித்துவிட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : banks ,Ice Gardens ,Tamaraparani ,
× RELATED வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல்