×

வீரகனூர் அருகே மாட்டு கொட்டகைக்கு தீ வைத்த மர்ம நபர்கள்

கெங்கவல்லி, பிப்.5: வீரகனூர் அருகே முன்விரோதத்தால் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரின் மாட்டு கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில், 5 மாடுகள் லேசான காயத்துடன் உயிர் தப்பின. வீரகனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ராயர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதராஜன். முன்னாள் கிராம நிர்வாக அலுவலரான இவர்,வீரகனூர் பஸ் நிலையத்தில் பதஞ்சலி ஸ்டோர் நடத்தி வருகிறார். இவரது சகோதரர் தனராஜ், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர். நேற்று அதிகாலை 4 மணிக்கு, இவரது விவசாய நிலத்தில் உள்ள கொட்டகையில், சகோதரர்கள் இருவருக்கும் சொந்தமான 6 பசு மாடுகளை கட்டி வைத்திருந்தார். திடீரென அந்த கொட்டகை தீப்பற்றி எரிந்தது. இதில் மாடுகள் தீ காயம் பட்டு, அலறி துடித்தது.  உடனடியாக மாடுகளை மீட்டு வெளியில் அழைத்து வந்ததால், 5 மாடுகள் லேசான காயத்துடன் உயிர் தப்பின. ஒரு சினை மாடு மட்டும் மிகுந்த தீக்காயத்துடன் ஆபத்தான நிலையில் உள்ளது.  இதுபற்றி வரதராஜன், வீரகனூர் போலீசில் புகார் அளித்தார். அதில், தனக்கும் பக்கத்து நிலத்தை சேர்ந்தவருக்கும் முன்விரோதம் இருந்ததாகவும், கடந்த 15 நாட்களுக்கு முன் தனது வைக்கோல் போருக்கு தீ வைத்து எரித்து விட்டதாகவும், மீண்டும் நேற்று முன்தினம் இரவு, மாட்டுக் கொட்டகையை தீ வைத்து எரிக்க போவதாக சவால் விடுத்ததாகவும், அவர் தான் தனது மாட்டுக் கொட்டகைக்கு தீ வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக வீரகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags : Veeraganur ,
× RELATED வீரகனூர் அருகே மது விற்ற வாலிபர் கைது