×

ஜாக்டோ - ஜியோ போராட்டம் தொடக்கம்

* அரசு ஊழியர்களும் குதித்தனர்
* அலுவலகங்கள் வெறிச்சோடியது
திருவள்ளூர், ஜன. 23: ஜாக்டோ ஜியோர் சார்பில் மாவட்டம் முழுவதும் அரசு ஊழிர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் ஊழியர்கள் இன்றி  அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகித முரண்பாடுகளை  களைய வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். 3,500 தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவையும், 3,500  சத்துணவு மையங்களை மூடும் முடிவையும் ரத்து செய்ய வேண்டும் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பு தொடர் போராட்டத்தில்  ஈடுபட்டு வந்த நிலையிலும், அது குறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதையடுத்து ஜாக்டோ - ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நேற்று துவங்கியது. ‘போராட்டத்தில் பங்கேற்றால் சம்பளப் பிடித்தம்  மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என அரசு எச்சரித்துள்ளது.இதையும் மீறி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், வருவாய்த் துறை ஊழியர்கள் என 92 சதவீதம் பேர் நேற்று பணிகளை  புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, திருவள்ளூர் தாலுகா அலுவலகம் முன் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ், அரசு ஊழியர்கள்  ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் தலைவர் சா.அருணன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 500க்கும் மேற்பட்டோர்  பங்கேற்றனர்.

 திருவள்ளூர் உட்பட அனைத்து தாலுகா அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், 14 வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் அனைத்தும்  ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால், உதவித்தொகை பெறுவோர், விண்ணப்பிப்போர் மற்றும் பல்வேறு திட்டங்களில்  பயன்பெறுவோரும், ஒன்றிய அலுவலகத்துக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பினர்.பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய ஒன்றியங்களில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் முழுமையாக  மூடப்பட்ட நிலையில், அரசு உயர் நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஒருசில தற்காலிக ஆசிரியர்கள் மூலம் பள்ளிகள் செயல்பட்டது.  காலை 9 மணிக்கு வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் பள்ளி கதவுகள் மூடப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மேலும்  வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, பேரூராட்சி அலுவலகங்க ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்றதால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி  காணப்பட்டது. பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ வட்ட ஒருங்கிணைப்பாளர் வி.வி.ஓசிராமன் தலைமை  வகித்தார். மாவட்ட உயர்மட்ட குழு உறுப்பினர் சு.கதிரவன் ஆர்g;பாட்டத்தை துவக்கிவைத்து கண்டன உரை ஆற்றினார்.ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை தாலுகா, பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகம் போன்ற பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு ஊழியர்கள்  வராததால் வெறிச்சோடி காணப்பட்டன. அரசு துவக்க பள்ளிகள் ஆசிரியர்கள் வராததால் பூட்டப்பட்டு இருந்தது. இதனால் மாணவர்கள் ஏமாற்றத்துடன் வீடு  திரும்பினர்.

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் தலைமையில், மாவட்ட பார்வையாளர் செங்குட்டுவன் முன்னிலையில்  ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் வேலைநிறுத்தம் செய்து, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பொன்னேரி:  பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு ஜாக்டோ ஜியோ அமைப்பின் உயர்மட்ட குழு தலைவர் காத்தவராயன்  தலைமை தாங்கினார். இதில், 200க்கும் மேற்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.  திருத்தணி: திருத்தணி கமலா திரையரங்கம் அருகில் ஜாக்டோ-ஜியோ அரசு ஊழியர் சங்கம் சார்பில் நடந்த போராட்டத்துக்கு திருவள்ளூர் மாவட்ட அரசு ஊழியர்  சங்க செயலாளர் காந்திமதிநாதன் தலைமை தாங்கினார். ஜாக்டோ-ஜியோ தலைவர் பூங்கோதை, சத்துணவு, மாநில செயற்குழு உறுப்பினர் மணிகண்டன்,  மாவட்ட பொருளாளர் டில்லி பாய் வருவாய்த்துறை வட்ட கிளை தலைவர் டில்லிபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்ஆவடி:  ஆவடி, தாலுகா அலுவலகத்திற்கு முன்பு நேற்று காலை 10 மணி அளவில் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் திரண்டு வந்தனர். பின்னர்,  அவர்கள் பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் ஷேக்கபூர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி  அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் கூட்டமைப்பின் நிர்வாகிகள் குப்புராஜ், ராஜு, ரத்தினகுமார், தியாகு, சிவகாமி, கணேசன், ஆனந்த்  உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். ஆவடி பகுதியில் உள்ள அரசு பள்ளிகள் பூட்டப்பட்டு இருந்ததால் மாணவர்கள் ஜாலியாக இருந்தனர்.

Tags :
× RELATED சட்டவிரோத செயல்களில்...