×

கேட்பாரற்று கிடந்த பார்சலுக்கு லக்கேஜ் டிக்கெட் இல்லாததால் பணிமனைக்கு திருப்பி அனுப்பப்பட்ட அரசுப் பேருந்து: பயணிகள் இறக்கிவிடப்பட்டனர்

திருவள்ளூர், மே 22: கேட்பாரற்று கிடந்த பார்சலுக்கு லக்கேஜ் டிக்கெட் இல்லாததால் பணிமனைக்கு அரசுப் பேருந்து திருப்பி அனுப்பப்பட்டதால், பயணிகள் பாதி வழியில் இறக்கிவிடப்பட்டனர். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதி செல்லும் தடம் எண் 201 அரசு அல்ட்ரா டீலக்ஸ் பேருந்து நேற்று பயணிகளுடன் புறப்பட்டு திருவள்ளூர் அருகே வந்து கொண்டிருந்தது. திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள பேருந்து நிலையத்தை வந்தடைந்தபோது, அங்கு இருந்த 2 பயணச்சீட்டு பரிசோதகர்கள் அந்த பேருந்தில் ஏறி பயணிகளிடம் பயணச் சீட்டை சரி பார்த்தனர். அப்போது பேருந்துக்குள் கேட்பாரற்று கிடந்த பார்சலை பார்த்து இதற்கான டிக்கெட் எங்கே என்று நடத்துனர் மற்றும் ஓட்டுநரிடம் கேட்டுள்ளனர்.

அதற்கான டிக்கெட் இல்லை என்று இருவரும் பதிலளிக்கவே திருப்பதி செல்வதற்காக பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்ட பயணிகளை பேருந்தில் இருந்து கீழே இறக்கிவிட்டு அந்த அரசு பேருந்தை திருவள்ளூர் பணிமனைக்கு திருப்பி அனுப்பினர். இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனையடுத்து 45 நிமிடங்கள் கழித்து சாதாரண அரசு பேருந்தை நிறுத்தி அதில் ஏறச் சொல்லவே, ஏசி பேருந்துக்கான டிக்கெட்டை எடுத்துவிட்டு நாங்கள் ஏன் சாதாரண பேருந்தில் செல்ல வேண்டுமென சில பயணிகள் டிக்கெட் பரிசோதகர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பயணிகளை சமாதானம் செய்து அனுப்பிய நிலையில் அங்கு வந்த திருவள்ளூர் பணிமனை மேலாளர், டிக்கெட் பரிசோதகர்களிடம் விசாரணை மேற்கொண்டார். இதுகுறித்து பணிமனை மேலாளரிடம் கேட்டபோது டிக்கெட் பரிசோதகர்கள் செய்தது சரிதான். அவர்களுக்கான விதிகளை அவர்கள் பின்பற்றினார்கள் என்றார். மேலும் பேருந்தில் கேட்பாரற்றுக் கிடந்த பார்சல் மற்றொறு அரசு மாநகர பேருந்து ஓட்டுனரின் பார்சல் எனவும், அதை கனகம்மாசத்திரம் பகுதியில் இறக்க வேண்டும் என்பதும் தெரியவந்தது. பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் செய்த தவறால் 20க்கும் மேற்பட்ட பயணிகள் நடுவழியில் இறக்கி விடப்பட்டு பேருந்தை பணிமனைக்கு திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கேட்பாரற்று கிடந்த பார்சலுக்கு லக்கேஜ் டிக்கெட் இல்லாததால் பணிமனைக்கு திருப்பி அனுப்பப்பட்ட அரசுப் பேருந்து: பயணிகள் இறக்கிவிடப்பட்டனர் appeared first on Dinakaran.

Tags : Govt ,Tiruvallur ,Chennai Koyambedu Bus Station ,Andhra Pradesh Tirupati… ,
× RELATED தமிழக அரசின் சீரிய திட்டமான இலவச...