×

சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்தப்படுவதாக தொடர்ந்து புகார் முறையான விவரங்களை தெரிந்து கொண்டு வெளிநாடு செல்ல வேண்டும்: அயலகத் தமிழர் நலத்துறை உதவியை நாடலாம்; இளைஞர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

திருவள்ளூர், மே 22: சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருவதால் முறையான விவரங்களை தெரிந்து கொண்டு வெளிநாடு செல்ல வேண்டும் என்றும்,அயலகத் தமிழர் நலத் துறை உதவியை நாடலாம் என்றும் இளைஞர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து திருவள்ளூர் கலெக்டர் த.பிரபுசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப
தாவது: தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு உயர் தொழில்நுட்பக் கல்வி பயின்ற இளைஞர்களை சமூக வலைத்தளம் மூலமாக மூளைச்சலவை செய்து கம்போடியா, தாய்லாந்து மற்றும் மியான்மர் நாட்டிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ‘டிஜிட்டல் சேல்ஸ் அண்ட் மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்’, ‘தரவு உள்ளீட்டாளர்’ வேலையை அதிக சம்பளத்தில் வாங்கி தருவதாக, சுற்றுலா விசாவில் ஏமாற்றி அழைத்துச் செல்கின்றனர். மேலும் கால்சென்டர் மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி போன்ற சட்ட விரோத செயல்களில் கட்டாயப்படுத்தி அவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

அவ்வாறு செய்ய மறுக்கும் நிலையில் அவர்கள் துன்புறுத்தப்படுவதாக தொடர்ந்து தகவல் கிடைக்கப்படுகிறது என அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம் தெரிவித்துள்ளது.
எனவே பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இனிவரும் காலங்களில் இருக்க வேண்டும். வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாக செல்லும் இளைஞர்கள், ஒன்றிய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம், வேலைக்கான விசா, முறையான பணி ஒப்பந்தம், என்ன பணி? போன்ற விவரங்களைச் சரியாகவும், முழுமையாகவும் தெரிந்து கொள்ள வேண்டும்.

அவ்வாறான பணிகள் குறித்து உரிய விவரங்கள் தெரியாவிட்டால் தமிழ்நாடு அரசின் சென்னையில் உள்ள “அயலகத் தமிழர் நலத் துறை” அல்லது குடி பெயர்வோர் பாதுகாப்பு அலுவலர் அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்தியத் தூதரகங்களை தொடர்பு கொண்டு, பணி செய்யப் போகும் நிறுவனங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும். இந்திய வெளியுறவுத் துறை மற்றும் வேலைக்குச் செல்லும் நாடுகளிலுள்ள இந்திய தூதரகங்களின் இணையதளங்களில் வெளியிடப்படும் அறிவுரைகளின் படி இளைஞர்கள், பொதுமக்கள் வெளிநாட்டு வேலைக்கு செல்ல வேண்டும்.

இது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் விவரங்களை www.emigrate.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும் சென்னை குடிப் பெயர்வு பாதுகாப்பு அலுவலக உதவி எண் 90421 49222 மூலமாகவும் poechennall@mea.gov.in, poechennal2@mea.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் இது தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கங்கள் பெறலாம். வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு உதவி தேவைப்படின், தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத் துறையின் கட்டணமில்லா 24 மணி நேர அழைப்பு உதவி மையத்தின் 18003093793, 8069009901, 8069009900 (மிஸ்டு கால்) எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். மேலும், வெளிநாடுகளிலுள்ள தமிழர்களுக்கு உதவி புரிய தமிழ்நாடு அரசின் “அயலகத் தமிழர் நலத் துறை” செயல்பட்டு வருகிறது. இவ்வாறு கூறியுள்ளார்.

The post சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்தப்படுவதாக தொடர்ந்து புகார் முறையான விவரங்களை தெரிந்து கொண்டு வெளிநாடு செல்ல வேண்டும்: அயலகத் தமிழர் நலத்துறை உதவியை நாடலாம்; இளைஞர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Tamils ,Thiruvallur ,Tamil Welfare Department ,Welfare Department ,
× RELATED குவைத் தீ விபத்தில் தமிழர்கள்...