×

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற மே 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு

திருவள்ளூர் மே 21: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு ‘முதலமைச்சர் மாநில இளைஞர் விருது’ ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ₹1 லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கத்தை உள்ளடக்கியதாகும். அதன்படி, 2023ம் ஆண்டிற்கான ‘முதலமைச்சர் மாநில இளைஞர் விருது’ வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது.

இந்த விருது பெற 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண், பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். கடந்த ஏப்ரல் 1, 2023 அன்று 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். மார்ச் 31, 2024 அன்று 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். இந்த விருதுக்கு தகுதியாக கடந்த நிதியாண்டில் 1.4.2023 முதல் 31.3.2024 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். இந்த விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். (சான்று இணைக்கப்பட வேண்டும்). விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றி இருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.

மத்திய மாநில அரசுகள், பொதுத்துறை பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் நிறுவனங்கள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். மேலும் இணையதளம் மூலம் மீண்டும் விண்ணப்பிக்க மே மாதம் 31ம் தேதி மாலை 4 மணி வரை நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
எனவே தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய www.sdat.tn.gov.in என்கிற இணையதளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பித்தல் வேண்டும். மேலும் தங்கள் சாதனை பற்றிய பத்திரிக்கை செய்திகள் மற்றும் சான்றிதழ்களை மூன்று புத்தகங்களாக தயார் செய்து மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை
அம்பத்தூரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கடந்த 10ம் தேதி முதல் வருகிற ஜூன் மாதம் 7ம் தேதி வரை சேர்க்கை விண்ணப்பம் ஆன்லைனில் பதிவு நடைபெற்று வருகிறது. 8ம் வகுப்பு தேர்ச்சி, 10, 12ம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. பயிற்சி அளிக்கப்படும் தொழிற் பிரிவுகள் விவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது.
இதில் கணினி வன்பொருள், வலைதள பராமரிப்பு, கணினி இயக்குபவர், திட்டமிடுதல் உதவியாளர், கட்டிட படவரைவாளர் மின்சாரப் பணியாளர், கம்மியர் மின்னணுவியல், பொறிப்பகுதி பொருத்துநர், உணவு, குளிர்பானங்கள் உபசரிப்பு உதவியாளர், உணவு தயாரிப்பவர் (பொது), கம்மியர் கருவிகள், தகவல் தொடர்பு தொழில்நுட்பம், சாதனங்கள் பராமரிப்பு, உட்புற வடிவமைப்பு தொழில் நுட்பவியலாளர்,

இயந்திர வேலையாள், கம்மியர் மோட்டார் வாகனம், கம்மியர் தானியங்கி வாகனங்கள் வர்ணம் பூசுதல், கம்மியர் தானியங்கி வாகனங்கள் பழுது பார்த்தல், கம்மியர் டீசல், கம்மியர் இயந்திர பராமரிப்பு, வர்ணம் பூசுபவர் (பொது), குழாய் பொருத்துபவர், உலோகத்தகடு வேலையாள், நில அளவையாளர், பற்றவைப்பவர், கம்பியாள், உற்பத்தி செயல்முறை கட்டுப்பாடு, தன்னியக்குமயம், தொழிற்துறை எந்திரனியல், எண்ணியல் உற்பத்தி தொழில்நுட்பவியலாளர், கம்மியர் மின்சார வாகனம், மேம்படுத்தப்பட்ட சிஎன்சி இயந்திர தொழில்நுட்ப வியலாளர், அடிப்படை வடிவமைப்பாளர், மெய்நிகர்
சரிபார்ப்பாளர் (இயந்திரவியல்) ஆகிய தொழிற்பிரிவுகள் உள்ளன.

இந்த பயிற்சியில் சேருவோருக்கு மாத உதவித்தொகை ₹750, இலவச பஸ் பாஸ், மிதி வண்டி, பாட புத்தகங்கள், வரை படக்கருவிகள், இரு இணை சீருடை, மூடு காலணி, சிறந்த தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்படும். மேலும் தமிழக அரசு வழங்கும் உயர்கல்வி உதவித்தொகை (6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற) மாணவிகளுக்கு ₹1000 கூடுதலாக வழங்கப்
படும். விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் – 5 ஆகியவற்றை எடுத்து வரவேண்டும். விண்ணப்பக்கட்டணம் ₹50ம், நேரில் வர இயலாதவர்கள் ஆன்லைன் மூலம் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் த.பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.

The post முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற மே 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,District ,Collector ,T. Prabhu Shankar ,Independence Day ,
× RELATED முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி, மாவட்ட...