×

ஊத்தங்கரை அருகே மதுக்கடையை அகற்ற கிராம மக்கள் முறையீடு

கிருஷ்ணகிரி, ஜன.8:  ஊத்தங்கரை அருகே காரப்பட்டு பெரியார் நகரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றிட வலியுறுத்தி கிராம மக்கள் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.  ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு பெரியார் நகர் கிராம மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர், குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தியிடம் ஒரு மனு அளித்தனர். அதில், அவர்கள் கூறியிருப்பதாவது:காரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் காரப்பட்டு, கதவணி, கீழ்மத்தூர், கருமாண்டபதி, உப்பாரப்பட்டி, குன்னத்தூர், பாப்பாரப்பட்டி, ராமகிருஷ்ணம்பதி, வண்ணாம்பள்ளி, ஜெ.புதூர், எளச்சூர், காமாட்சிப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் உள்ள மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அத்துடன் இந்த ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்கள், வங்கி, அரசு துணை சுகாதார நிலையம், மின்வாரிய அலுவலகம், கால்நடை மருந்தகம் போன்றவற்றுக்கும் காரப்பட்டிற்கு தான் செல்ல வேண்டும். கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் காரப்பட்டு பேருந்து நிறுத்தத்திற்கு சென்று வரவேண்டும். இவ்வாறு மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறந்து வைத்திருப்பது, பொதுமக்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் பெரும் இடையூறாக உள்ளது. இங்குள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்துவிட்டு, இருசக்கர வாகனங்களை போதையில் தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்துகின்றனர். எனவே, காரப்பட்டு பெரியார் நகரில் உள்ள டாஸ்மாக் கடையை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக அகற்றிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : Uthangarai ,
× RELATED நாட்டுத்துப்பாக்கியை பதுக்கிய 2 பேர் கைது