×

வேலூர் - திருவண்ணாமலை இடையே பவுர்ணமி கிரிவலத்துக்கு சிறப்பு ரயில் தெற்கு ரயில்வே அறிவிப்பு

திருவண்ணாமலை, டிச.19: தினகரன் செய்தி எதிரொலியாக, பவுர்ணமி கிரிவலத்துக்கு வேலூர் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்குவதற்கான கால அட்டவணையை தெற்கு ரயில்ேவ வெளியிட்டுள்ளது.
திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி கிரிவலம் செல்ல நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஆனால், அவர்களுக்கான போக்குவரத்து வசதி போதுமான அளவில் இல்லை. மேலும், பஸ் கட்டண உயர்வினால், பக்தர்களின் வருகையும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது எனவே, கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு இயக்குவதைப் போல, ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் சிறப்பு ரயில்களை இயக்கினால், பயனுள்ளதாக இருக்கும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும், பஸ் கட்டணத்தைவிட, ரயில் கட்டணமும் மிகவும் குறைவு. பயண சோர்வும் ஏற்படாது. எனவே, சிறப்பு ரயில்கள் இயக்குவது அவசியம் என வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், இது தொடர்பாக தினகரன் நாளிதழில் கடந்த 9ம் தேதி, ‘பஸ் கட்டண உயர்வால் பக்தர்கள் வருகை குறைவு, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா’ என விரிவான செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, சிறப்பு ரயில் இயக்குவதன் அவசியத்தை வலியுறுத்தி தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கடிதம் அனுப்பினார். இது தொடர்பாக பரிசீலனை செய்த தெற்கு ரயில்வே நிர்வாகம். முதற்கட்டமாக வரும் பவுர்ணமிக்கு வேலூர் - திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்குவதற்கான அறிவிப்ைப நேற்று வெளியிட்டது. மேலும், இந்த மாதம் கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 21ம் தேதி நள்ளிரவு 1.39 மணிக்கு தொடங்கி, 22ம் தேதி நள்ளிரவு 11.57 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, அதற்கு தகுந்தபடி சிறப்பு ரயில் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்து 21ம் தேதி இரவு 9.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், திருவண்ணாமலைக்கு இரவு 11.25 மணிக்கு வந்தடையும். இந்த சிறப்பு ரயில், கணியம்பாடி 9.57 மணி, கண்ணமங்கலம் 10.08 மணி, ஆரணி ரோடு 10.24 மணி, போளூர் 10.40 மணி, அகரம் 10.52 மணி, துரிஞ்சாபுரம் 11.06 மணிக்கு வந்தடையும் வகையில் பயண நேரம் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், திருவண்ணாமலையில் 22ம் தேதி அதிகாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்துக்கு காலை 5.55 மணிக்கு சென்றடையும். இந்த சிறப்பு ரயில், துரிஞ்சாபுரம் 4.12 மணி, அகரம் 4.29 மணி, போளூர் 4.41 மணி, ஆரணி ரோடு 5 மணி, கண்ணமங்கலம் 5.16 மணி, கணியம்பாடி 5.33 மணிக்கு சென்றடையும்படி பயண நேரம் திட்டமிடப்பட்டுள்ளது. பவுர்ணமி கிரிவலத்துக்கு முதன்முறையாக சிறப்பு ரயில் இயக்கும் அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டிருப்பது பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. மாதேந்தோறும் இந்த சிறப்பு ரயிலை பவுர்ணமி நாளில் இயக்கவும், திருவண்ணாமலை - விழுப்புரம் இடையேயும் இதுபோன்ற சிறப்பு ரயில் இயக்கவும் வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Southern Railway ,Poonamani Chaitra ,Tiruvannamalai ,Vellore ,
× RELATED ஆட்டிசம் குறையால் பாதிக்கப்பட்ட மகனை...