×

(தி.மலை) சிறுமியை திருமணம் செய்த டிரைவர் மீது போக்சோ வழக்கு

 

செய்யாறு, மே 29: செய்யாறு அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்த டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ஆலந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன்(25), லோடு ஆட்டோ டிரைவர். இவருக்கும், உறவினரது மகளான 17 வயது சிறுமிக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்துள்ளது. இதுதொடர்பாக கடந்த 16ம் தேதி 1098 என்ற எண் மூலம் குழந்தைகள் நல காப்பகத்திற்கு தகவல் தெரிய வந்தது.
அதன்பேரில் வெம்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலக விரிவாக்க அலுவலர் ஷீலாதேவி மற்றும் அதிகாரிகள், ஆலந்தாங்கல் கிராமத்திற்கு சென்று பிரபாகரனிடம் விசாரணை நடத்தினர்.

அதில் குழந்தை திருமணம் செய்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் குழந்தை திருமணம் சட்டப்படி குற்றம் என பிரபாகரனை எச்சரித்தனர். இதையடுத்து சிறுமியை மீட்டு திருவண்ணாமலையில் உள்ள அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலக விரிவாக்க அலுவலர் ஷீலாதேவி, செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லதா வழக்கு பதிவு செய்து பிரபாகரனிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

The post (தி.மலை) சிறுமியை திருமணம் செய்த டிரைவர் மீது போக்சோ வழக்கு appeared first on Dinakaran.

Tags : Th. Malai ,POCSO ,Seyyar ,Prabhakaran ,Alandhangal village ,Tiruvannamalai district.… ,
× RELATED (தி.மலை) வீட்டிலிருந்து வெளியேறிய...