×

இலவச பாடப்புத்தகங்களை வழங்க ஏற்பாடு பள்ளிகளை தூய்மைப்படுத்தி தயாராக வைக்க உத்தரவு

திருவண்ணாமலை, மே 26: கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கும் போது, புத்தகங்கள் மற்றும் பாடக்குறிப்பேடுகளை மாணவர்களுக்கு முழுமையாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறைக்கு பிறகு அடுத்த மாதம் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதையொட்டி, பள்ளிகள் திறப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளில் கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், பள்ளிகள் திறக்கும் முதல் நாளன்றே, மாணவர்கள் அனைவருக்கும் இலவச பாட புத்தகங்கள் மற்றும் பாடகுறிப்பேடுகள் ஆகியவற்றை முழுமையாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதை ஒட்டி, அனைத்து பள்ளிகளுக்கும் பாட புத்தகங்களை லாரிகள் மூலம் அனுப்பி வைக்கும் பணி நேற்று நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர்கள் முன்னிலையில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தேவையான பாட புத்தகங்கள் அனுப்பப்பட்டன.

மேலும், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆய்வு அலுவலர்கள் அனைவரும், பள்ளி திறக்கும் நாளில் பள்ளியை பார்வையிட்ட பிறகே மாணவர்களை வகுப்பறைகளுக்குள் அனுமதிக்க வேண்டும். பள்ளியின் சுற்றுச்சுவர், ஜன்னல், மின் வயர்கள் ஆகியவை பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி வளாகத் தூய்மை, வகுப்பறைத் தூய்மை செய்யப்பட்டிருப்பதை சரி பார்க்க வேண்டும், முட்புதர்கள், செடிகள் இருந்தால் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத வளாகமாக பராமரிக்க வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கைக்கு தகுந்தபடி, தண்ணீர் வசதியுடன் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும். தேவையான அளவு பாதுகாக்கப்பட்ட குடிநீரை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

The post இலவச பாடப்புத்தகங்களை வழங்க ஏற்பாடு பள்ளிகளை தூய்மைப்படுத்தி தயாராக வைக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai ,Tamil Nadu ,
× RELATED திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கஞ்சா விற்ற பெண்கள் உள்பட 5 பேர் கைது