×

8 வழிச்சாலைக்கு ஆதரவு என்பது பொய் பாதிக்கப்படும் விவசாயிகள் கருப்பு கொடி கட்டி போராட்டம்


சேலம் பூலாவரியில் பரபரப்பு
சேலம், டிச.16:சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு மக்கள் ஆதரவு இருப்பதாக கூறுவது பொய் எனக்கூறி, பூலாவரியில் பாதிக்கப்படும் விவசாயிகள், கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தினர்.சேலம்-சென்னை இடையே ₹10 ஆயிரம் கோடியில் 8 வழிச்சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் விவசாய விளை நிலங்கள், மலைகளை அழித்து உருவாக்கப்படும் இச்சாலைக்கு மக்களும், பாதிக்கப்படும் விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் 8 வழிச்சாலை தொடர்பான பணியை தொடங்க இடைக்கால தடையை விவசாயிகள் பெற்றுள்ளனர். இருந்தபோதிலும், சாலைக்காக கையகப்படுத்தக்கூடிய நிலங்களின் விவரத்தை சர்வே எண்ணுடன் அரசு வெளியிட்டது. இதற்கு பாதிக்கப்படும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் போராட்ட களத்தில் குதித்துள்ளனர். சேலத்தில் நேற்று முன்தினம் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

இந்த சூழலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘‘8 வழிச்சாலை அமைக்க நிலம் கொடுப்போரில் 89 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துவிட்டனர். 11 சதவீத பேர் மட்டுமே எதிர்கின்றனர். அவர்களின் நிலத்திற்கும் உரிய இழப்பீட்டை வழங்கி சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்,’’ என்று தெரிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பையடுத்து, சேலம் பூலாவரியில் நேற்று மாலை பாதிக்கப்படும் விவசாயிகள் கருப்பு கொடி கட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமசாமி என்பவரது தோட்டத்தில் திரண்ட விவசாயிகள், தென்னை மரங்களிலும், வருவாய்த்துறையினரால் நடப்பட்ட நில எடுப்பு எல்லை கற்களிலும் கருப்பு கொடியை கட்டி, ஒரு போதும் நில எடுப்புக்கு அனுமதிக்க மாட்டோம் என கோஷமிட்டனர். 8 வழிச்சாலைக்கு மக்களிடம் ஆதரவு இருப்பதாக கூறுவது பொய். பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் 5 மாவட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். ஏற்கனவே இருக்கும் சாலையை விரிவுப்படுத்திக் கொள்ள அரசு முன்வர வேண்டும். புதிதாக விளை நிலங்களை அழித்து சாலை அமைக்க விடமாட்டோம் என விவசாயிகள் தெரிவித்தனர். விவசாயிகளின் இப்போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : pavilions ,
× RELATED பொன்னேரி அருகே 4 வழிச்சாலைக்கு மக்கள்...