×

செங்கத்தில் நடைபெறும் 8 வழிச்சாலைக்கான கருத்துக்கேட்பு கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்போம் விவசாயிகள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு

செங்கம், டிச.12: செங்கத்தில் நடைபெறும் 8வழிச்சாலைக்கான கருத்துக்கேட்பு கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்று விவசாயிகள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. சென்னை முதல் சேலம் வரை 8 வழி பசுமைச்சாலை திட்டத்திற்கு விவசாயிகள் அமைப்பின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் இந்த வழக்கை தடைசெய்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் மீண்டும் விவசாய நிலங்களில் உள்ள மரங்களை கணக்கெடுத்து வனத்துறையினர் முலம் மரங்களில் பெயின்ட்டில் குறியீடு எண் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணியை அனைத்து விவசாயிகளும் தடுத்து, ஆவேசத்துடன் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் அந்த பணிகள் பாதியில் நின்றது. இருப்பினும் வனத்துறையினர் எங்களுக்கு உயர் அதிகாரிகள் வழங்கிய பணிகளை நாங்கள் செய்ய வந்தோம். நீங்கள் தடுத்து விட்டீர்கள். ஆனால் எங்களின் உயர் அதிகாரிகள் மீண்டும் நேரில் வந்து பணிகளை தொடர்வார்கள் என்று தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து 2ம் கட்டமாக 8 வழிச்சாலை திட்டத்திற்கு செங்கம் தாலுகாவில் நிலம் கையகப்படுத்தவர்களுக்கு அரசு துறையினால் கடிதம் வழங்கப்பட்டு உள்ளது. இதில் கடிதம் கிடைத்த 21 நாட்களுக்குள் விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் செங்கம் தாலுகாவில் உள்ள விவசாயிகள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் நேற்று செங்கம் அடுத்த பெரும்பட்டம் கிராமத்தில் ஒன்று திரண்டு தற்போது நீதிமன்றத்தால் 8 வழி சாலைக்கு தடை உத்தரவு வழங்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அரசு துறை அதிகாரிகள் நிலம் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை எப்படி எதிர் கொள்வது, கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டு என்ன கருத்துகளை பதிவு செய்வது, கோரிக்கை மனு அளிப்பது என்பது குறித்து விவசாயிகள் ஆலோசனை செய்தனர். தொடர்ந்து 21 நாட்களுக்கு பிறகு நடைபெறும் கருத்துக்கேட்பு கூட்டத்தில் பங்கேற்காமல் ஒட்டுமொத்தமாக 8வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் மூலம் தீர்வு காணலாம் என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : meeting ,venue ,protest ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...