×

கடலூரில் அமைச்சர் திறந்து வைத்த பயணியர் நிழற்குடைகள் பராமரிப்பு இன்றி சேதம்

கடலூர், டிச. 6: கடலூரில் லட்சக்கணக்கில் செலவு செய்து பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடைகள் பராமரிப்பின்றி பழுதடைந்துள்ளன.
மாவட்டத்தின் தலைநகரான கடலூரில் வளர்ச்சி திட்டங்கள் எதுவுமின்றி மிகப்பெரிய கிராமம் என்ற அளவிலேயே இருந்து வருகிறது. குறைந்தபட்சம் பேருந்துகள் நிற்கும் இடங்களில் கூட நிழற்குடைகள் இல்லாமல் இருந்ததால் பொதுமக்கள் மழையிலும் வெயிலிலும் அவதிப்பட்டு வந்தனர். இது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று கடலூர் டவுன்ஹால் அருகில் 2013-14ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் அமைச்சர் எம்.சி சம்பத் புதிய நிழற்குடையை திறந்து வைத்தார்.

2014-15ம் ஆண்டு ஆல்பேட்டையில் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலும், புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் குளிர்சாதன வசதியுடன் கூடிய நிழற்குடையையும் அமைச்சர் சம்பத் திறந்து வைத்தார். மேலும் பல இடங்களிலும் நிழற்குடைகள் திறக்கப்பட்டன. திறக்கப்பட்ட நிலையில் நிழற்குடைகள் அனைத்தும் டைல்ஸ்கள் பதிக்கப்பட்டு ஸ்டீல் இருக்கைகளுடன் அழகிய தோற்றத்துடன் இருந்தன. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.  பயணிகளும் முழுமையாக பயன்படுத்தினர்.  இந்நிலையில் உரிய பராமரிப்பின்றி நாளடைவில் நிழற்குடைகள் குப்பை கிடங்குகளாயின.  உரிய தரத்துடன் அமைக்கப்படாததால் தரைப்பகுதி உடைய தொடங்கியது. ஸ்டீல் இருக்கைகள் துருபிடித்து உடைந்தன. அவற்றை இரவு நேரங்களில் குடிகாரர்கள் பெயர்த்து எடுத்துச் சென்று இரும்பு கடையில் விற்ற அவலமும் நடந்தது. மேலும் குப்பையும் கூளமுமாய் ஈக்கள் மொய்த்து சுகாதார சீர்கேட்டுடன் நிழற்குடைகள் காணப்படுவதால் பயணிகள் அவற்றை பயன்படுத்த முடியாமல் அவற்றை விட்டு வெளியே நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.  

இதுபோல கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் வில்வநகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் பேருந்துகள் நிற்காத, பயணிகள் பயன்படுத்தாத இடங்களில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. நிழற்குடைகள் பழுதடைந்து சுகாதார சீர்கேட்டுடன் உள்ளதால் அவற்றை பயன்படுத்த முடியாமல் மீண்டும் கடலூரில் பொதுமக்கள் மழையிலும் வெயிலிலும் அல்லல்பட்டு வருகின்றனர். பழுதடைந்துள்ள நிழற்குடைகளை ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்.  தரமற்ற கட்டுமானங்கள், இருக்கைகள் அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நிழற்குடைகளை பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது நல அமைப்புகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளன.

Tags : Minister ,
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி