×

குண்டும், குழியுமான முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சாலை

விக்கிரவாண்டி, நவ. 23:   விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கத்தில் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை  உள்ளது. இங்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் அனைத்து வகையான மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் விழுப்புரம் மாவட்டம் மட்டுமல்லாமல் கடலூர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த  பொதுமக்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் மருத்துவ சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இது மட்டுமின்றி மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மட்டுமல்லாது இந்தாண்டு முதல் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான வகுப்புகளும் துவக்கப்பட்டுள்ளதால் அவர்களும் வந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் தேசிய நெடு்ஞ்சாலையின் அருகிலேயே அமைந்துள்ளதால் திருச்சி உள்ளிட்ட சென்னை செல்லும் ஆம்புலன்சுகள் இங்கு வந்து நோயாளிகளை மாற்றி வேறு வாகனத்தில் அனுப்புவதற்காக வந்து செல்வதற்கும் வசதியாக அமைந்துள்ளது.

 இது மட்டுமின்றி மாவட்டத்தில் இயங்கும் 108 ஆம்புலன்ஸ் வண்டிகள் குழந்தைகளுக்கான வாகனம், பைக் உள்ளிட்ட 54 ஆம்புலன்சுகள் மற்றும் கடலூர் மாவட்ட ஆம்புலன்சுகள் தினசரி வந்து செல்கின்றன. மேலும் டூவீலர், கார், பைக் என டாக்டர்கள், பார்வையாளர்கள், தனியார் ஆம்புலன்சுகள் என நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இவ்வளவு மருத்துவ வசதிகள் இருந்தும் அனைவரும் வந்து செல்லும் சாலையானது மிகவும் படுமோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வந்து செல்லும் ஆம்புலன்சுகள் உட்பட அனைத்து வாகனங்களும் சிரமப்பட்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மழைக்காலம் துவங்கியுள்ளதால் சாலையில்  நீர் தேங்கி பள்ளம், இருக்கும் இடம் தெரியாமல் உள்ளதால் பைக்கில் வரும் நோயாளிகள் கீழே விழுந்து படுகாயமடைந்த சம்பவமும் நடந்துள்ளது.

 சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் காந்திஜெயந்தி அன்று முண்டியம்பாக்கத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அறிவித்தார்கள். ஆனால் சாலை அமைக்கும் பணிகள் இதுவரையில் துவங்க வில்லை. மழைக்காலம் துவங்கியுள்ளதால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக மருத்துவ கல்லூரிக்கு செல்லும் சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kundi ,Kondi Mundiyambakkam ,Government Medical College Hospital Road ,
× RELATED தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் ஒரு கிலோ தர்பூசணி ரூ10க்கு விற்பனை