×

இன்சூரன்ஸ் பணத்தை ஏமாற்றிய ஆசிரியை மீது நடவடிக்கை கோரி விதவை பெண் மகன், மகளுடன் தீக்குளிக்க முயற்சி : வேலூர் குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு

வேலூர், அக்.16: இன்சூரன்ஸ் பணத்தை ஆசிரியை ஏமாற்றியதாக புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால், விதவை பெண் மகன், மகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் வேலூர் குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று கலெக்டர் ராமன் தலைமையில் நடந்தது. அப்போது பள்ளிகொண்டாவை சேர்ந்த திருநங்கைகள் 13 பேர் கொடுத்த மனுவில், ‘நலவாரியத்தில் உறுப்பினராக உள்ள எங்களுக்கு தங்குவதற்கு இடமோ, வீடோ இல்லை. எனவே அணைக்கட்டு ஒன்றியம் செதுவாலை கிராமம், வல்லண்டராமத்தில் அரசு நிலத்தில் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தனர். மேல்விஷாரம் பகுதி மக்கள் அளித்த மனுவில், ‘எங்கள் பகுதியில் ஏற்கனவே தனியார் மணல் குவாரிக்கு விடப்பட்ட ெடண்டரால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நவ்லாக் பகுதியில் மாட்டுவண்டிகளில் இரவு நேரங்களில் அனுமதியின்றி அதிகளவு மணல் கடத்தப்படுகிறது. இதனை தட்டிக்கேட்கும் பொதுமக்களை அடியாட்கள் வைத்து கடத்தல்காரர்கள் மிரட்டுகின்றனர். மணல் கடத்தலால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து பாலாறு சீரழிந்து வருகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர்.

இந்நிலையில், ஜோலார்பேட்டையை சேர்ந்த ரேவதி(39) என்பவர், தனது மகன், மகளுடன் கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது அவர் திடீரென அலுவலக போர்டிகோ அருகே கேனில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த பெண் போலீசார், ரேவதியை தடுத்து நிறுத்தினர். விசாரணையில், ‘கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கணவர் டிரைவர் ரகு இறந்து விட்டார்.
அப்போது கிடைத்த இன்சூரன்ஸ் பணத்தை அப்பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டதாகவும், பணத்தை பெற்றுத்தரும்படி பலமுறை புகார் அளித்தும் ேபாலீசார் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல், ஒருதலைபட்சமாக செயல்படுகின்றனர். இதனை கண்டித்து பிள்ளைகளுடன் தீக்குளிக்க முயன்றேன்’ என்றார். இதையடுத்து அவரை எச்சரித்து அனுப்பிய போலீசார், மனுவை வாங்கி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதனால், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

பாக்ஸ்...மண்ணெண்ணெய் கொண்டுவரப்பட்டது எப்படி?
கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், தீக்குளிப்பு சம்பவங்களை தடுக்க தீவிர சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. அனைவரும் சோதனை செய்யப்பட்ட பின்னரே, உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், நேற்று நடந்த தீக்குளிப்பு முயற்சியில் மண்ணெண்ணெண் கேன் எப்படி உள்ளே கொண்டுவரப்பட்டது? என்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவரது மகனிடம் சால்வையில் கேனை சுற்றி பையில் போட்டு கொடுத்துள்ளார். போலீசாரும் பள்ளி மாணவன் தானே என்று பையை சோதனை செய்யாமல் விட்டுவிட்டனர். பின்னர், அலுவலக வளாகத்தில் நுழைந்தவுடன் தீக்குளிக்க முயற்சித்தது தெரியவந்தது.

Tags : widow ,cheating teacher ,
× RELATED ஜம்மு காஷ்மீரில் வீர மரணமடைந்த...