×

சித்தூர் அருகே பரிதாபம் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்ற முயன்றபோது ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் குட்டையில் மூழ்கி பலி

சித்தூர், அக்.16: மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்ற முயன்றபோது ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் குட்டையில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
சித்தூர் மாவட்டம், திகுவ வீதி கிராமத்தை சேர்ந்தவர் சித்துலு(67). இவரது மனைவி ரமாதேவி(52). இவர்களுக்கு தேவி என்ற மகளும், நரேஷ் (25) என்ற மகனும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி தற்போது பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு வந்துள்ளார். நரேஷ் திருப்பதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் விடுமுறையில் வந்த நரேஷ், பெற்றோருடன் சேர்ந்து தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மா மரக்கன்றுகளை நட்டுக்கொண்டிருந்தார். நரேஷின் பெற்றோர், மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக விவசாய நிலத்தில் மழைநீர் சேமிப்புக்காக தோண்டிய குட்டையில் இருந்து தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் மாலை தேவியின் கணவர் சுப்பையா மனைவியை பார்க்க மாமியார் வீட்டிற்கு வந்தார். நீண்ட நேரமாகியும் மாமியார், மாமனார் மற்றும் மச்சான் நரேஷ் ஆகியோர் வீட்டுக்கு வராததால் நிலத்திற்கு சென்று பார்த்தார்.

அப்போது நரேஷின் செல்போன் குட்டையின் அருகே இருந்தது. மேலும், ரமாதேவியின் புடவை குட்டையில் மிதந்து கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சுப்பையா கிராம மக்கள் உதவியுடன் குட்டையில் இறங்கி தேடினர். அப்போது தந்தை, தாய், மகன் ஆகிய 3 பேரும் நீரில் மூழ்கி இறந்து கிடந்தது தெரியவந்தது. குட்டையில் இறங்கி தண்ணீர் எடுத்தபோது 3 பேரும் நிலை தடுமாறி விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த பீலேர் போலீசார் விரைந்து சென்று சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பீலேர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : pit ,Chittor ,
× RELATED ஸ்ரீ தேவிலோகமாத்தம்மன் கோயிலில் 37ம் ஆண்டு தீ மிதி விழா