×

தஹி சர்ச்சையில் பின் வாங்கியது ஒன்றிய அரசு: தயிர் என்றே விற்கலாம் என்று அறிவிப்பு

புதுடெல்லி: தஹி சர்ச்சையில் ஒன்றிய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் பின்வாங்கியுள்ளது.  ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கடந்த 10ம் தேதி கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அரசு பால் கூட்டுறவு சங்கங்களுக்கு தயிர் பாக்கெட்டுக்களின் மீது தஹி என இந்தியில் எழுத வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது.  ஆங்கிலத்தில் அச்சிட்டு அதன் கீழ் தஹி என அச்சிட வேண்டும் என்றும் வேண்டுமானால் அடைப்புக்குறிக்குள் பிராந்திய மொழிகளில் எழுதிக்கொள்ளுமாறும் ஆணையம் குறிப்பிட்டு இருந்தது.

ஒன்றிய அரசின் இந்த உத்தரவுக்கு தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பானது, ஆவின் பெயரில் தஹி என்ற இந்தி வார்த்தையை பயன்படுத்த முடியாது என்று மறுத்ததோடு தயிர் என்பது மட்டுமே அச்சிடப்படும் என்று தெரிவித்ததை அடுத்து சர்ச்சை வெடித்தது. மேலும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினம் இந்த நடவடிக்கை இந்தி திணிப்பு முயற்சி என்று கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தனது உத்தரவினை மறுஆய்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து தயிர் பாக்கெட்டுக்களில் பிராந்திய மொழி பெயர்களை பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்துள்ளது.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரின் எதிர்ப்பு காரணமாக ஒன்றிய அரசின் நிறுவனம் பின்வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : union government , The union government took the back seat in the tahi controversy: announced that it can be sold as curd
× RELATED வீர் சக்ரா விருது பெற்ற மாஜி கடற்படை...