புதுடெல்லி: பில்கிஸ் பானு வழக்கில் குஜராத், ஒன்றிய அரசுகளிடம் விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு நடந்த கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி பெண் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினர் 7 பேர் வெட்டிக்கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்ற 11 பேர் தண்டனைக்காலம் முடியும் முன்பு விடுவிக்கப்பட்டனர். இதை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு நேற்று நீதிபதிகள் கே.எம். ஜோசப், பிவி நாகரத்னா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை உணர்ச்சியின் அடிப்படையில் அல்ல. சட்டத்தின் அடிப்படையில் விசாரிக்கப்போவதாக தெரிவித்த நீதிபதிகள் வரும் 18ம் தேதிக்குள் குஜராத், ஒன்றிய அரசுகள் விளக்கம் அளிக்க வேண்டும். குஜராத் அரசு வழக்கு தொடர்பான அத்தனை ஆவணங்களையும் சமர்ப்பிக்க தயார் நிலையில் வர வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
