*நடவடிக்கை எடுக்க வாகனஓட்டிகள் கோரிக்கை
திட்டக்குடி : திட்டக்குடி- விருத்தாசலம் சாலை ஆக்கிரமிப்புகளால் கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்படும் நிலை உள்ளது. ஆக்கிரமிப்பு அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திட்டக்குடியில் இருந்து தொழுதூர் வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலையிலும், திட்டக்குடியில் இருந்து விருத்தாசலம் செல்லும் மாநில நெடுஞ்சாலையிலும் அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், கல்லூரி வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் தினந்தோறும் சென்று வருகிறது.
திட்டக்குடி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகள் மற்றும் அவர்களது வீடுகளில் ஏதேனும் சுப நிகழ்ச்சிகளுக்கு திட்டக்குடிக்கு தான் வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்கின்றனர். திட்டக்குடிக்கு வரும் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர். இந்த நெடுஞ்சாலையை பலர் ஆக்கிரமித்து வியாபாரம் செய்கின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளால் ஏற்படும் நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. அதுமட்டுமின்றி இருசக்கர வாகனங்களை சாலையில் இருபுறமும் நிறுத்திவிட்டு செல்கின்றனர்.
இதனால் வாகன ஒட்டிகள் சாலையில் செல்வதற்கு மிகுந்த சிரமப்படுகின்றனர். அப்பகுதியில் போக்குவரத்து காவல் அமைத்து போக்குவரத்தை சரி செய்ய வேண்டும். காலை மற்றும் மாலை வேளைகளில் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்று சைக்கிளில் வரும்போது கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
போலீசார் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். காலை மற்றும் மாலை இரு வேலைகளும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதியில் போக்குவரத்தை சரி செய்து பாதுகாப்பு பணி மேற்கொள்ள வேண்டும். நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் காலையில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும். இங்கு 90 முதல் 110 அடி வரையுள்ள சாலையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.
பெரும்பான்மையான பகுதி ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ளது. அதுமட்டுமின்றி திட்டக்குடியில் இருந்து பெருமுளைக்கு செல்லும் சாலை பொதுமக்கள் நடக்கவே முடியாத அளவிற்கு சாலையின் இருபுறமும் இருசக்கர வாகனத்தை நிறுத்தி ஆக்கிரமித்து உள்ளனர். கனரக வாகனங்கள் அவ்வழியாக செல்ல வேண்டுமென்றால் 20 நிமிடங்கள் ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது. அந்த நேரத்தில் போக்குவரத்து முற்றிலும் தம்பித்து விடுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்து நெரிசலை நெடுஞ்சாலைத்துறை சரி செய்ய வேண்டும். சாலையில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
