×

தமிழகத்தில் வறண்ட வானிலை காரணமாக படிப்படியாக வெப்பநிலை உயரும்: 4 நாட்கள் நீடிக்கவும் வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் வறண்ட வானிலை காரணமாக அடுத்த சில தினங்களுக்கு ஒருசில இடங்கள் தவிர பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை படிப்படியாக உயரும், என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நீடித்து வரும் வறண்ட வானிலையால் பெரும்பாலான இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. அதன் காரணமாக கரூர் மாவட்டத்தில் நேற்றும் 102 டிகிரி வெயில் கொளுத்தியது. தென் தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் இயல்பை ஒட்டியே வெப்பநிலை இருந்தது.

இந்நிலையில், மன்னார் வளைகுடா முதல் வடக்கு உள் கர்நாடகா வரையில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக வறண்ட வானிலை நீடிக்கும் என்ற கணிப்பின்படி நேற்றும் வறண்ட வானிலை நிலவியது. இது இன்றும் நீடிக்கும். 27ம் தேதி கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். பிற பகுதிகளில் வறண்ட வானிலை நீடிக்கும். 28ம் தேதி முதல் 30ம் தேதி வரையில் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

வெப்பநிலையை பொருத்தவரையில் அதிபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்துக்கான வாய்ப்பு இன்று குறைவாக இருக்கிறது. 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் படிப்படியாக உயரவும் வாய்ப்புள்ளது. சென்னையில் இன்றும் வெப்பநிலை மற்றும் வெயில் இயல்பை ஒட்டியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,Chennai Meteorological Department ,
× RELATED கொடைக்கானலில் இரவு நேரத்தில் உலா...