×

கண்ணியமாக இறுதிச்சடங்கு செய்வது அடிப்படை உரிமை உடலை வைத்து அரசியல் செய்வது ஏற்கத்தக்கது அல்ல: ஆகாஷ் மரண வழக்கில் ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் உடலை வைத்து அரசியல் செய்வது ஏற்கத்தக்கது அல்ல, கண்ணியமாக இறுதிச்சடங்கு செய்வது அடிப்படை உரிமை என ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. மதுரை மானகிரியை சேர்ந்த செல்வகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மானாமதுரை ஆகாஷின் மரணத்திற்கு காரணமான காவல் துறையினரை கைது செய்து தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட காவல் துறையினரை பணியிட மாற்றம் செய்யுமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இது மனு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், ஜோதிராமன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் அஜ்மல்கான், குற்றவியல் கூடுதல் வழக்கறிஞர் அன்புநிதி ஆகியோர் ஆஜராகி, ‘‘மனுதாரர் குறிப்பிடும் வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை சரியான முறையில் சென்று கொண்டிருக்கிறது. அரசே தாமாக முன்வந்துதான் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியது. தனி நீதிபதி இது தொடர்பான வழக்கை விசாரித்து தீர்ப்புக்காக ஒத்திவைத்துள்ளார்.

விசாரணையின்போது வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டும், இதுவரை உடலை பெறவில்லை. இதுவரை 47 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணை அதிகாரியான சிபிசிஐடி டிஎஸ்பி விசாரித்து வருகிறார். வழக்கு தொடர்பான சிசிடிவி காட்சிகள் பாதுகாக்கப்பட்டுள்ளது. ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மனுதாரர் 22ம் தேதி மனு அனுப்பிய அதே நாளில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘உடலை பெற வேண்டாம் என தடுத்தது யார்? நீதிமன்றத்தை உங்களின் தனிப்பட்ட விருப்பத்திற்காக பயன்படுத்த வேண்டாம்.

உடல் அங்கேயே அழுக வேண்டும் என விரும்புகிறீர்களா? கோரிக்கைகள் ஏற்கப்பட்டும், உடலை பெறாமல் இருப்பது ஏன்? உடலை பெற்று முறையாக இறுதி மரியாதை செய்ய வேண்டும். அதை விடுத்து உடலை வைத்து அரசியல் செய்வது ஏற்கத்தக்கது அல்ல. தற்போது உடலை வைத்து போராட்டம் நடத்துவது பேஷனாக உள்ளது. உடலுக்கு கண்ணியமான முறையில் இறுதிச்சடங்கு செய்யப்பட வேண்டியது அடிப்படை உரிமை. அதனை குடும்பத்தினர் உறுதி செய்ய வேண்டும். இந்த மனு விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் வரம்புக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கலாம்’’ எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

Tags : Akash ,Madurai ,Manamadurai Akash ,High Court ,Court ,Selvakumar ,Managiri, Madurai ,
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 12 ஆயிரம்...