தூத்துக்குடி: தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் காரில் பறக்கும்படையினர் சோதனை நடத்தினர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதனால் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று மாலையில் எட்டயபுரம் ரோட்டில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் காரில் வந்தார். உடனடியாக பறக்கும் படை அதிகாரிகள், அமைச்சரின் காரை நிறுத்தினர். பின்னர் அதிகாரிகள் காருக்கான அனுமதி கடிதத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து அமைச்சரின் கைப்பையை சோதனை செய்தனர். காரின் பின்பகுதியில் ஏதேனும் பரிசு பொருட்கள் வைக்கப்பட்டு உள்ளதா என்றும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதைத் தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
